அரசாங்கம் என்எப்சிமீதான தணிக்கை அறிக்கையை வெளியிடாதிருக்கிறது

சர்ச்சைக்குரிய நேசனல் ஃபீட்லோட் செண்டர் திட்டம் மீதான தணிக்கை அறிக்கை “சிறிது காலத்துக்கு முன்பே” தயாராகி விட்டது ஆனால் கமுக்கமாக வைக்கப்பட்டிருக்கிறது என்கிறார் கோலா சிலாங்கூர் எம்பி சுல்கிப்ளி அஹ்மட்.

“(துணைப்பிரதமர்) முகைதின் யாசின் உத்தரவின்பேரில் பிரைஸ்வாட்டர்ஹவுஸின் அறிக்கை தயாராக இருப்பதை அறிவோம்.அதை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்”, என அந்த பாஸ் கட்சி எம்பி செய்தியாளர்களிடம் கூறினார். 

“அறிக்கை தயாராகி விட்டது தெரியும்.பிறகு ஏன் அதை வெளியிட தாமதம்? நேசனல் ஃபீட்லோட் செண்டரின் ரிம250மில்லியன் ஊழல் விவகாரத்தில் தெரிய வந்த உண்மைகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்”, என்றாரவர்.

நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு(பிஏசி) உறுப்பினரான டோனி புவா, அக்குழு வழியாக அந்த அறிக்கையைப் பெற எண்ணம் கொண்டிருக்கிறார்.

“ஆனால், பிஏசி கூட்டத்துக்கு இன்னும் ஏற்பாடு செய்யவில்லை”, என்றவர் கூறினார்.
இவ்விவகாரம் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சு சம்பந்தப்பட்டது என்பதால் அதன் துணை அமைச்சர் சுவா, அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்று சிலாயாங் எம்பி வில்லியம் லியோங் கேட்டுக்கொண்டார்.

சிலாங்கூர் அரசாங்கம் தாலம் மீதான தணிக்கை அறிக்கையை நவம்பர் மாத சட்டமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்ய உறுதிகூறியிருப்பதை லியோங் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்றாரவர்.

சிலாங்கூர் அரசு தாலம் விவகாரத்தில் “சரியான வணிக முடிவைச் செய்தது” என்பது கேபிஎம்ஜே கணக்காய்வாளர்களின் தீர்ப்பு என சிலாங்கூர் மந்திரி புசார் நேற்று அறிவித்தார்.

“சிலாங்கூர் அரசாங்கத்தைக் குறைகூறுவதை நிறுத்திக்கொண்டு அதைப் போல நீங்களும் செயல்படுங்கள்”, என்று லியோங் மத்திய அரசை நோக்கிக் கூறினார்.

சிலாங்கூர் அரசு, நொடித்துப் போகும் நிலையிலிருந்த தாலம் கார்ப்பரேசனைக் கைகொடுத்து காப்பாற்றியது என்றும் அதற்காக ரிம1பில்லியனை வாரி இறைத்தது என்றும் மசீச குற்றம் சுமத்தியுள்ளது.  

 

 

TAGS: