இளம் வயதுப் பெண் ஒருவர் பிரதமருடைய படத்தை மிதித்ததற்காக கைது செய்யப்பட்டு போலீஸ் தடுப்புக் காவலில் 15 மணி நேரத்துக்கு மேல் இருந்த பின்னர் அதற்காகப் பொது மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் இன்று கோலாலம்பூரில் டிஏபி தலைமையகத்தில் நிருபர்களிடம் பேசினார். தேச நிந்தனை செய்யும் எண்ணம் ஏதும் தமக்கு இல்லை என 19 வயது ஒங் சிங் யீ என்ற அந்தப் பெண் கூறினார்.
தாம் ‘ஆர்வத்துடன்’ இருந்ததாகவும் படத்தை மிதித்த மற்றவர்களைத் தாம் ‘பின்பற்றியதாகவும்’ தமது வழக்குரைஞர் வழியாக பேசிய ஒங் சொன்னார்.
“அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன் அது வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்றும் வலியுறுத்தினார். தேச நிந்தனைக் குற்றத்தைப் புரியும் எண்ணம் அவருக்கு இல்லை,” என ஒங்-கின் மொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றிய வழக்குரைஞர் எரிக் தான் தெரிவித்தார்.