பிகேஆர் பிரச்சார பேருந்தின் பாதுகாப்பு கூட்டப்படும்

பிகேஆர் நாடு முழுக்க மெர்டேகா ரக்யாட் இயக்கத்தைப் பரப்புவதற்குப் பயன்படுத்தும் பேருந்தைப் பாதுகாக்க அதன் இளைஞர் பகுதியிலிருந்து தொண்டர்படையினர் திரட்டப்படுவார்கள்.

இதனைத் தெரிவித்த பிகேஆர் தலைவர் வான் அசீசா வான் இஸ்மாயில், செப்டம்பர் முதல் தேதி கோத்தா பாருவில் பிகேஆர் பேருந்து சேதப்படுத்தப்பட்ட சம்பவம், மலேசியா போன்ற அமைதியான நாட்டில் நடக்கும் என்பதைத் தாம் கற்பனை செய்துகூட பார்த்ததில்லை என்றார்.

“பேருந்தின் பாதுகாப்பை அதிகரிப்போம். பிகேஆர் இளைஞர் தொண்டர்படையினர் இனி முறைவைத்து பேருந்தைக் கவனித்துக் கொள்வார்கள்”.மெர்டேகா ரக்யாட் இயக்கத்துக்குப் பயன்படுத்தப்படும் ஒரு இழுவை வண்டியை (trailer) அறிமுகப்படுத்தி பின்னர் அசீசா செய்தியாளர்களிடம் பேசினார்.

செப்டம்பர் முதல் தேதி, அதிகாலை ஐந்து மணி அளவில் கோத்தா பாருவில் பிகேஆர் பேருந்தின் முன்கண்ணாடி உடைக்கப்பட்டு சிவப்புச் சாயம் வீசியடிக்கப்பட்டிருந்தது. கிளந்தானில் மெர்டேகா ரக்யாட் இயக்க வேலைகளுக்காக அப்பேருந்தை கட்சியின் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் ஆகியோரின் புகைப்படங்களைக் காலில் போட்டு மிதித்த இளைஞர்கள்மீது போலீஸ் விசாரணை நடத்துவதைப் பற்றிக் கருத்துரைத்த வான் அசீசா, பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அசீஸ் நிக் மாட் ஆகியோரின் புகைப்படங்கள் தரையில் போட்டு மிதிக்கப்பட்டபோதும் போலீசார் அதேபோன்று நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்றார்.

“நஜிப்பின் புகைப்படத்தை மிதித்தார்கள் என்பதற்காக நடவடிக்கை எடுத்த போலீசார், லிம்,நிக் அசீஸ் படங்களை மிதித்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?”, என்றவர் வினவினார்.