யார் என்றென்றும் ஆட்சியில் இருப்பது என்பதை முடிவு செய்வது மக்கள், பக்காத்தான் அல்ல

அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் வென்றால் அதன் பின்னர் என்றென்றும் ஆட்சியில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்வது அதன் கைகளில் இல்லை. வாக்காளர்கள்தான் அதைத் தீர்மானிக்க வேண்டும் என்று டிஏபி கூறுகிறது.

பக்காத்தான் “என்றென்றும் ஆட்சியில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்யும்” என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியிருப்பதற்கு டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் இவ்வாறு எதிர்வினை ஆற்றியுள்ளார்.

மகாதிரின் கூற்று “சுத்த அபத்தமானது” என்று லிம் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

“முதலாவதாக, மலேசியர்களில் மிகப் பலர், பாரிசான் மீண்டும் ஆட்சிக்குத் திரும்ப முடியாத நிலையை ஒரு தேசிய பேரிடராக நினைக்கப் போவதில்லை…”

“ஆனாலும், ஆட்சி செய்யும் பொறுப்பை மீண்டும் ஏற்காமல் பிஎன் அரசு ஒரு வரலாறு ஆகிவிடுமா என்பதை வாக்குகள்வழி மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதை பக்காத்தான் ரக்யாட் தீர்மானிக்க இயலாது”, என்றாரவர்.

மாற்றரசுக் கூட்டணி ஆட்சிக்கு வந்து எதிர்காலத்தில் பிஎன் ஆட்சிக்கு வருவதை மக்கள் விரும்பி அதைத் தேர்தலில் தேர்ந்தெடுப்பார்களானால் தோல்வியைத் தாங்கள்  இன்முகத்துடன் ஏற்போம் என்பதை வலியுறுத்திய லிம், அம்னோவும் அதுபோன்ற உத்தரவாதத்தை அளிக்க முன்வருமா என்றும் வினவினார்.

“ நஜிப்புக்கும் மகாதிருக்கும் சவால் விடுக்கிறேன். 13வது பொதுத் தேர்தலில் மலேசியர்கள் ஆட்சிமாற்றத்துக்கு வாக்களித்தால் புத்ரா ஜெயாவில் ஆட்சிமாற்றம் அமைதியான முறையில் நடந்தேற அம்னோ இடமேற்படுத்திக் கொடுக்கத் தயாரா?”

“இவ்விசயத்தில் நஜிப்பும் மகாதிரும் மெளனமாக இருப்பதை மக்கள் கவனிக்காமல் இல்லை”, என்றார் லிம்.

நேற்று மகாதிர், பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால்,“பிஎன் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க என்னென்ன வேண்டுமோ அத்தனையையும் செய்யும்” என்று கூறியிருந்தார்.

“எதைப் பற்றியும் கவலைப்படாது அச்ச உணர்வைப் பரப்புவதையே பொழுதுபோக்காகக் கொண்டு செயல்படும்” முன்னாள் பிரதமரைச் சாடிய லிம், மகாதிரின் பேச்சுகள் “அவர் நடப்பில் பிரதமராக ‘மீண்டும் ஆட்சிப்பொறுப்புக்கு’ வந்துவிட்டார் என்ற மலேசியர்களின் கருத்தை உறுதிப்படுத்துகிறது என்றார்.

TAGS: