இப்போது பினாங்கு பிஎன்-னின் ‘போர் வாகனத்துக்கு’ சிவப்புச் சாயம் தெளிக்கப்பட்டுள்ளது

அரசியல் பிரச்சாரம் தொடர்பிலான சேதப்படுத்தும் நடவடிக்கைகள் இப்போது பிஎன் முகாமுக்கு பரவியுள்ளதாகத் தோன்றுகிறது.

பிஎன் -னுடைய ‘போர் வாகனத்தின்’ முன் பக்க பம்பரில் சிவப்புச் சாயம் வீசப்பட்டுள்ளதாக பினாங்கு பிஎன் இளைஞர் பிரிவு இன்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டுள்ளது.

ஜாலான் மெக்காலிஸ்டரில் உள்ள மாநில கெரக்கான் தலைமையக வளாகத்துக்குள் அந்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதும் அது சேதப்படுத்தப்பட்டுள்ளது குறித்து மாநில பிஎன் இளைஞர் தலைவர் ஒ தொங் கியோங் “வருத்தம்’ தெரிவித்துக் கொண்டார்.

அந்த வாகன ஒட்டுநர் சேதத்தை இன்று காலை மணி 7 அளவில் கண்டு பிடித்ததாகவும் அவர் சொன்னார்.

“நாங்கள் யார் மீது பழி போடவில்லை. ஆனால் இது மலேசியப் பண்பாடு அல்ல. இது மீண்டும் நிகழாது என நாங்கள் நம்புகிறோம்,” என ஒ நிருபர்களிடம் கூறினார்.

பிஎன் இளைஞர் பிரிவு ஜாலான் பட்டாணி போலீஸ் நிலையத்தில் இன்று பிற்பகல் அந்தச் சம்பவம் பற்றிப் போலீசில் புகார் செய்யும்.

கடந்த வாரம் பிகேஆர் கட்சி தொடங்கியுள்ள ‘மெர்தேக்கா பாதை’ (Jelajah Merdeka) என்னும் இயக்கத்தின் முதல் கட்டமாக அதன் பஸ் கோத்தாபாருவில் இருந்த போது அதன் முன்பக்க கண்ணாடி மீது சிவப்புச் சாயம் வீசப்பட்டது.

அந்த பஸ்ஸில் கட்சியின் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் உட்பட பல தலைவர்கள் பயணம் செய்தனர்.

சில நாட்களுக்கு முன்னர் அலோர் ஸ்டாரில் பள்ளிவாசல் ஒன்றில் அன்வார் உரையாற்றிய போது பெர்க்காசா உறுப்பினர்கள் என நம்பப்படும் 100 பேர் கொண்ட கும்பல் இடையூறு செய்தது. ஆனால் பெர்க்காசா அதில் சம்பந்தப்படவில்லை என அந்த மலாய் உரிமைப் போராட்ட அமைப்பு மறுத்துள்ளது.

கடந்த செவ்வாய்க் கிழமை ஜாலான் பட்டாணியில் டிஏபி ஏற்பாடு செய்திருந்த நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பின் போது பாடாங் கோத்தா லாமாவில் தங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிக் கொண்ட அங்காடிக்காரர்கள் குழு ஒன்று மேற்கொண்ட ‘தாக்குதலில்’ மாநில அரசாங்க வாகனம் ஒன்று சேதமடைந்தது.