காலால் மிதிபட்டது நஜிபின் படம் மட்டுமல்ல, இதற்கு முன்பு இதுபோன்ற அநாகரிகமான நடவடிக்கைகள் பல நடந்தும் காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் இப்போது திடீரென காவல்துறை விழுந்தடித்துக்கொண்டு செயல் படுவது ஆச்சரியமாக உள்ளதாக 20 சமூக இயக்கங்களை பிரதிநிதிக்கும் வர்காஅமான் மற்றும் பவர் என்ற கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளான ராஜரத்தினம் மற்றும் கோபி கிருஷ்ணன் ஆகியோர் கூறினர்.
[காணொளி]
இன்று காலை 11.30 மணியளவில் புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்தின் முன் கூடிய வர்காஅமான் மற்றும் பவர் என்ற கூட்டமைப்புகளின் ஆறு பிரதிநிதிகள் இது சார்பாக படங்கள் அடங்கிய மனுவை புக்கிட் அமான் காவல்துறையிடம் சமர்பித்தனர்.
மெர்டேக்கா தினத்துக்கு முதல் நாளன்று டாத்தாரான் மெர்டேக்காவில் அத்தகைய அவமரியாதையான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 11 பேரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
ஒர் இளைஞன் தனது பிட்டத்தைக் காண்பித்ததற்காக காவல்துறையினர் முதன் முறையாக தனிநபர்களை வேட்டையாடும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். அவர்கள் சிலர் காவல்துறையிடம் சரணடைந்துள்ளனர். அத்துடன் த்தகைய அவமரியாதையான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி இளம் வயதுப் பெண் ஒருவருக்கு கை விலங்கு மாட்டப்பட்டது.
ஆனால் தாங்கள் எந்தப் பக்கமும் சாயவில்லை என்றும் காவல்துறையில் புகார் செய்யப்பட்டால் பக்காத்தான் ராக்யாட் தலைவர்கள் சம்பந்தப்பட்ட அது போன்ற சம்பவங்களையும் விசாரிப்பதாகவும் காவல்துறையினர் உறுதி கூறியுள்ளனர்.
பிரமுகர்களுக்கு அவமரியாதை செய்வது 1948-ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். எனவே இனி காவல்துறையினர் நாங்கள் கொடுத்த படங்களின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என ஆட்சேப மறியலில் ஈடுபட்டவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட செனட்டர் இராமகிருஷ்ணன், காவல்துறையினர் தனது உறுதியை மெய்யாக்க இந்த படங்களில் உள்ளவர்களையும் விசாரிக்க வேண்டும். மக்களின் பேச்சுரிமை என்பதும் உணர்வை வெளிப்படுத்தும் முறையும் பண்பாட்டுக்கு உகந்த வகையில் நிகழ வேண்டும் என்றார்.