அரசு சாரா அமைப்புக்கள் அந்நிய நிதி உதவியைப் பெறலாம் என்கிறார் ஐநா பேராளர்

அரசு சாரா அமைப்புக்கள் தங்கள் நிதிகளை எப்படிப் பெற வேண்டும் என்பதற்குக் கட்டுப்பாடுகள் ஏதும் இருக்கக் கூடாது. அந்த நிதிகள் உள்நாட்டு வளங்களிலிருந்து அல்லது வெளிநாட்டு வளங்களிலிருந்து வந்தாலும் கட்டுப்பாடுகள் இருக்கக் கூடாது என அமைதியாக ஒன்று கூடும் சுதந்திரம் மீதான ஐநா சிறப்பு அனுசரணையாளர் மைனா கியாய் கூறுகிறார்.

சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கான உரிமைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கு நிதிகள் மிகவும் அவசியமானவை. அரசாங்கங்களுக்கும் பொது நிறுவனங்களுக்கும் நிதி வழங்குவது தொடர்பான அதே விதிமுறைகள் அரசு சாரா அமைப்புக்களுக்கும் பின்பற்றப்பட வேண்டும் என அவர் இன்று பொதுக் கருத்தரங்கு ஒன்றில் கூறினார்.

“மலேசியா அதன் தொடக்க காலத்தில் பெருமளவு அந்நிய நிதி உதவியைப் பெற்றதை நான் அறிவேன். அது இப்போது நிதிகளை வழங்குகின்றவராக இருக்க வேண்டும். அரசாங்கம் அந்நிய ஏஜண்டு என அப்போது யாரும் குற்றம் சாட்டவில்லை.”

“அதே நிலை சங்கங்களுக்கும் பொருந்தும். நிதி இல்லாவிட்டால் நீங்கள் ஒன்று கூடுவதற்கான உரிமையைப் பயன்படுத்த முடியாது,” என கென்யாவைச் சேர்ந்த பிரபல வழக்குரைஞருமான  கியாய் சொன்னார்.

மலேசியாவில் பல தொழில்கள் அந்நிய நிதி உதவியைப் பெற்று வருகின்றன. அத்துடன் நவீன உலகமும் அந்த நடைமுறையில்தான் இயங்குகிறது என்றார் அவர்.

அந்த ஐநா சிறப்பு அனுசரணையாளர் கோலாலம்பூரில் வழக்குரைஞர் மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் ஒன்று கூடும் சுதந்திரத்தைப் பயன்படுத்துவதற்கான அனைத்துலகத் தரங்கள்- நடைமுறைகள் பற்றிப் பேசினார்.

சுவாராம் என்ற மனித உரிமைப் போராட்ட அமைப்புக்கு நிதிகளை வழங்கும் வட்டாரங்கள் குறித்த ஆய்வை அதிகாரிகள் அண்மையில் தொடங்கியுள்ளதின் தொடர்பில் கியாய்-யின் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்கா, ஜெர்மனி ஆகியவற்றைச் சேர்ந்த நிறுவனங்கள் சுவாராமுக்கு நிதி அளிப்பதாக கூறப்பட்டுள்ளது.