அம்னோவுக்குள் உள்ளடி வேலை செய்ய நினைப்போருக்கு துணைப் பிரதமர் எச்சரிக்கை

அம்னோவின் பொதுத்தேர்தல் வேட்பாளர்களுக்குக் குழிபறிக்கும் தலைவர்களும் உறுப்பினர்களும் கட்சியிலிருந்து தயவு தாட்சண்யமின்றி நீக்கப்படுவார்கள் என்று துணைப் பிரதமரும் அம்னோ துணைத் தலைவருமான முகைதின் யாசின் எச்சரித்துள்ளார்.

அது, வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்படாததால் ஆத்திரமும் வெறுப்பும் அடைந்துள்ளோரை நோக்கி விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.

“அவர்கள் பொதுத் தேர்தலின்போது உள்ளடி வேலைகளில் ஈடுபடுவார்களானால் அவர்களைக் கட்சியிலிருந்து விலக்குவோம். அப்படிப்பட்டவர்கள் நமக்குத் தேவையில்லை.

“(அம்னோ) தலைவருக்கும் (நஜிப் அப்துல் ரசாக்) அது சம்மதமே. வேட்பாளர்களுக்குக் குழிபறிப்போர் நமக்குத் தேவையில்லை. வேட்பாளர்கள் தோற்றால் கட்சியும் தோற்றுப்போகும்”, என்றாரவர்.

முவாரில் பக்ரி அம்னோ தொகுதிக்கூட்டத்தைத் தொடக்கிவைத்தபோது முகைதின் அவ்வாறு எச்சரித்தார்.