பிகேஆர் பஸ் மீது மீண்டும் சிவப்பு சாயம் வீசப்பட்டது

இரண்டு அடுக்குகளைக் கொண்ட பிகேஆர் பஸ் மீண்டும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இந்த முறை மலாக்கா, ஜாசினில் அது நிகழ்ந்துள்ளது.

பிகேஆர் கட்சி, தனது Jelajah Merdeka Rakyat இயக்கத்தின் ஒரு கட்டமாக தென் பகுதிக்கு சென்றுள்ள வேளையில் அதன் மீது சிவப்புச் சாயம் வீசப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ளப்பட்ட போது பிகேஆர் இளைஞர் தலைவர் சம்சுல் இஸ்காண்டார் முகமட் அக்கின் அந்த விவரங்களை அறிவித்தார்.

கம்போங் ரிம்-க்கு அருகில் பஸ் முன் கண்ணாடி மீது சிவப்புச் சாயம் வீசப்பட்டதாக அவர் சொன்னார்.

“நோன்புப் பெருநாள் நிகழ்ச்சிக்காக அந்த பஸ் கம்போங் ரிம்-மை பிற்பகல் மணி 3.30 வாக்கில் சென்றடைந்தது. அங்கு திடீரென்று அணுகிய 20 பேர் எங்கள் பாதையைத் தடுக்க முயன்றனர்,” என அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

அந்த 20 பேரும் பிஎன் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என சம்சுல் கூறிக் கொண்டார். காரணம் அம்னோ ஜாசின் குழு உறுப்பினர் ஒருவரை அந்தக் கும்பலில் கண்டதாக அவர் சொன்னார்.

கடந்த சனிக்கிழமை அந்த பிகேஆர் பஸ் கோத்தாபாருவுக்கு சென்றிருந்த போது அதன் மீது சிவப்புச் சாயம் வீசப்பட்டது. அதன் முன் கண்ணாடி கல் ஒன்றினால் சேதமடைந்தது. அது பின்னர் மாற்றப்பட்டு விட்டது.