‘Undilah’ வீடியோவை திரைப்படத் தணிக்கையாளர்கள் ‘இன்னும் அங்கீகரிக்கவில்லை’

வாக்காளர்களாகத் தங்களைப் பதிந்து கொள்ளுமாறு பொது மக்களுக்கு ஊக்கமூட்டும் சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிபரப்ப வேண்டாம் எனத் தான் உத்தரவிட்டதற்கான காரணத்தை மலேசிய பல்லூடக தொடர்பு ஆணையம் (எம்சிஎம்சி) விளக்கியுள்ளது.

இசைக் கலைஞர் பீட் தியோ தயாரித்த நான்கரை நிமிடங்களுக்கு ஒடும் அந்த பொதுச் சேவை அறிவிப்பு வீடியோவுக்கு திரைப்படத் தணிக்கை வாரியம் இன்னும் அனுமதி அளிக்கவில்லை என அது கூறியது.

“அங்கீகாரம் கிடைக்காததால் தொலைக்காட்சி நிலையங்கள் அந்த வீடியோவை ஒளியேற்றியிருக்கக் கூடாது,” என எம்சிஎம்சி இன்று விடுத்த அறிக்கை கூறியது.

“ஆகவே 1998ம் ஆண்டுக்கான பல்லூடக, தொடர்புச் சட்டத்தின் கீழ் எல்லா ஒளிபரப்பாளர்களும் அந்த ஒளிநாடாவை ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும்,” என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

“ஒளிபரப்பாளர்கள் அந்த அனுமதி- நடைமுறையைப் பின்பற்றவில்லை என்பது தான் பிரச்னையே தவிர அந்த பொதுச் சேவை அறிவிப்பில் உள்ள அம்சங்கள் அல்ல.”

மலேசியா உலகில் தலை சிறந்த ஜனநாயக நாடு என அரசாங்கத் தலைவர்கள் கூறிக் கொள்ளும் வேளையில் அதற்கு முரணாக எம்சிஎம்சி நடவடிக்கை அமைந்துள்ளதாக லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் நேற்று கூறியிருந்தார்.

அந்த வீடியோவில் நுருல் இஸ்ஸாவுடன் குவா மூசாங் எம்பி தெங்கு ரசாலில் ஹம்சா, கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.

“மலேசியா அழகான நாடு. ஆனால் பல பிரச்னைகள் உள்ளன. அவை குறித்து நான் பேச வேண்டிய அவசியம் இல்லை. அந்தப் பிரச்னைகள் என்ன என்பது நமக்குத் தெரியும்,” என்ற தெங்கு ரசாலி கூறுவதுடன் அந்த வீடியோ தொடங்குகிறது.

“நான் சொல்ல விரும்புவது, மலேசியாவின் எதிர்காலம் உங்கள் கரங்களில். ஆகவே நீங்கள் வாக்களிக்க இன்னும் பதிவு செய்து கொள்ளவில்லை என்றால் விரைவில் அவ்வாறு செய்யுங்கள்…”

“நினைவில் கொள்ளுங்கள், என்ன நடந்தாலும் மலேசியா உங்கள் நாடு, இது நமது நாடு. அதற்குப் பல பிரச்னைகள் உள்ளன. மலேசியாவுக்கு நாம் தேவை.”

சுகாதாரத் துணை அமைச்சர் ரோஸ்னா அப்துல் ரஷீட் ஷிர்ர்லின், டிஏபி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா, பாஸ் ஷா அலாம் எம்பி காலித் சாமாட் பிகேஆர் ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் நிக் நாஸ்மி நிக் அகமட் ஆகியோருடன் நாமெவீ, அப்ட்லின் ஷாவ்கி ஆகிய கலைஞர்களும் அந்த ஒளிநாடாவில் இடம் பெற்றுள்ளனர்.

: