சுவாராமுக்கு சோரோஸுடன் தொடர்புண்டா என்று அமைச்சு ஆராய்கிறது

சுவாரா ரக்யாட் மலேசியா (சுவாராம்) வுக்கு பணஉதவி செய்வதாகக் கூறப்படும் அமெரிக்காவின் அரசுசாரா அமைப்பு ஒன்று நாணய ஊக வணிகரான ஜார்ஜ் சோரோஸுடன் தொடர்பு கொண்டதா என்பதை உள்நாட்டு வாணிப,கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சு ஆய்வு செய்து வருகிறது. அதன் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப் இதனைத் தெரிவித்தார்.

சுவாராமுக்குப் பெருமளவில் நிதியுதவு செய்யும் இரண்டு என்ஜிஓ-களில் அதுவும் ஒன்று என அவர் சொன்னார்.

நேற்று நீலாயில் ராசா அம்னோ தொகுதி பேராளர் கூட்டத்தைத் தொடக்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மலேசிய நிறுவனங்கள் ஆணையம் (எஸ்எஸ்எம்) வழியாக அமைச்சு விசாரணை செய்துவருவதாக தெரிவித்தார்.

பேங்க் நெகாரா, 2001 பணச்சலவைத் தடுப்பு மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் விசாரணை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் இஸ்மாயில் சப்ரி கூறினார்.

அத்துடன் உள்துறை அமைச்சும் சங்கப் பதிவகமும் சுவாராமின் தகுதி பற்றியும் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

-பெர்னாமா