இசா சட்டத்தை ரத்துச் செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை சிங்கப்பூர் நிராகரிக்கிறது

சிங்கப்பூரில் விசாரணை இல்லாமல் தடுத்து வைப்பதற்கு வகை செய்யும் பிரிட்டிஷ் காலனித்துவச் சட்டம் ஒன்றை ரத்துச் செய்யுமாறு  முன்னாள் அரசியல் கைதிகள் விடுத்த கோரிக்கையை அந்த நாட்டு அரசாங்கம் நிராகரித்துள்ளது.

அந்த முன்னாள் இசா கைதிகள் ‘கீழறுப்பு நடவடிக்கைகளுக்காக’ தடுத்து வைக்கப்பட்டனரே தவிர அவர்களுடைய அரசியல் சிந்தனைகளுக்காக அல்ல என்று உள்துறை அமைச்சு கூறியது. அந்த அமைச்சின் இணையத் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடான மலேசியா அந்தச் சட்டத்தை ரத்துச் செய்ய வாக்குறுதி அளித்த பின்னர், 16 முன்னாள் கைதிகள் பகிரங்கமாக விடுத்த ஒரு செய்தியில் இசா-வைக் கைவிடுமாறு அண்மையில் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டனர்.

எதிர்ப்பை முடக்குவதற்கு ஒரு கருவியாக இசா பயன்படுத்தப்படுவதாக சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் உள்ள பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

“ஆனால் பயங்கரவாதம் போன்ற தேசிய பாதுகாப்புக்கு மருட்டல்களை முறியடிப்பதற்கு அந்தச் சட்டம் அவசியம் என அந்த மாநகர நாட்டின் உள்துறை அமைச்சு கூறியது.

“அந்த 16 பேரும் அவர்களுடைய அரசியல் நம்பிக்கைகளுக்காக தடுத்து வைக்கப்படவில்லை. மாறாக அவர்கள் தேசியப் பாதுகாப்புக்கு மருட்டலைத் தரக் கூடிய கீழறுப்பு நடவடிக்கைகளில் தங்களை பிணைத்துக் கொண்டதற்காக கைது செய்யப்பட்டனர்,” என சிங்கப்பூர் உள்துறை அமைச்சு தெரிவித்தது.

மலாயா என்று பொதுவாக அழைக்கப்பட்ட காலனிகளில் கம்யூனிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களை எதிர்த்துப் போராடுவதற்கு உதவியாக இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிரிட்டன் முதலில் இசா சட்டத்தை அமலாக்கியது.

1965ம் ஆண்டு மலேசியக் கூட்டரசிலிருந்து சுதந்தரம் பெற்ற பின்னரும் சிங்கப்பூர் அந்தச் சட்டத்தை நிலை நிறுத்தியது.

மலேசிய அரசாங்கம் இசா சட்டத்தை ரத்துச் செய்யும் என்று இம்மாதத் தொடக்கத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்த பின்னர் அதே சட்டத்தை சிங்கப்பூரும் ரத்துச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அங்கு அதிகரித்தன.

என்றாலும் தீவிரவாத குழுக்கள், “தங்களைத் தீவிரவாதிகளாக மாற்றிக் கொண்ட தனிநபர்கள்”  ஆகியோருடைய மருட்டல்களை முறியடிப்பதற்கு இசா இன்னும் பொருத்தமானது என்றும் சிங்கப்பூர் கூறியது.