சிலாங்கூர் அரசு இணக்கம் தெரிவிக்காத நிலையிலும் மத்திய அரசு பலமில்லியன் ரிங்கிட் லங்காட் 2 நீர்சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் திட்டத்தைத் தொடர்வதில் உறுதியாக உள்ளது.அத்திட்டத்துக்கு டெண்டர்கள் சமர்ப்பிக்குமாறு அது கேட்டுக்கொண்டிருக்கிறது.
நீர் ஆதார நிர்வாக நிறுவன(பிஏஏபி)த்தின் அகப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிக்கை, நவம்பர் 30-க்குள் டெண்டர்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறுகிறது,
அது தொடர்பான விளக்கக்கூட்டம் நாளை கோலாலம்பூரில் மினாரா பல்நோக்கு மண்டபத்தில் நடைபெறும் என அது கூறிற்று. டெண்டர் தொடர்பான ஆவணங்களும் ரிம10,000 விலையில் நாளை முதல் கிடைக்கும்.
அக்கூட்டத்தில் திட்டம் அமையப்போகும் இடம் பற்றிய தகவலும் தெரிவிக்கப்படும் என்று பிஏஏபி கூறியது.
லங்காட் 2 திட்டத்துக்கு சிலாங்கூர் அரசு மறுப்புத் தெரிவித்து வந்துள்ளது.அந்தக் கட்டுமானத்திட்டத்தையும் மாநில தண்ணீர் சீரமைப்புத் திட்டத்தையும் ஒருசேர விவாதிக்க வேண்டும் என்பது அதன் வாதம்.
ஆனால், மத்திய அரசு இரண்டு விவகாரங்களும் தனித்தனியே விவாதிக்கப்பட வேண்டியவை என்பதில் பிடிவாதமாக உள்ளது.
ஜூலையில் தண்ணீர் விவகாரம் மீதான அமைச்சரவைக் குழுக் கூட்டத்துக்குத் தலைமையேற்ற துணைப் பிரதமர் முகைதின் யாசின், சிலாங்கூரின் இணக்கமின்றி அத்திட்டத்தை மேற்கொள்ள வழி உண்டா என்பதை ஆராயுமாறு சட்டத்துறைத் தலைவருக்கு(ஏஜி) உத்தரவிட்டார்.
டெண்டர் அழைக்கலாம் என்றார் ஏஜி
சிலாங்கூர் எதிர்த்தாலும் டெண்டருக்கு அழைப்பு விடுக்கலாம் என்று ஏஜி அப்துல் கனி பட்டேய்ல் அக்குழுவிடம் தெரிவித்திருப்பதாக அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி சைனா பிரஸ் திங்கள்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.
அத்திட்டத்துக்கு அண்டை மாநிலமான பகாங்கிலிருந்து குழாய்வழியாக நீர் கொண்டுவருவதற்கு சிலாங்கூர் அரசு எதிர்ப்புத் தெரிவிக்கிறது.மாநிலத்திலேயே போதுமான நீர் உண்டு என்று அது கூறுகிறது..
லங்காட் 2 திட்டத்துக்கு ரிம8.7பில்லியன் செலவாகும் என மதிப்பிடப்படுகிறது.அது பகாங்கிலிருந்து 45கிமீ சுரங்கப்பாதை வழியாகக் கொண்டுவரப்படும் நீரைச் சுத்திகரிக்கப் பயன்படும்.
சிலாங்கூர் அரசு, ஷரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூரை(ஸபாஷ்) வசப்படுத்தி அதன் நிர்வாகத்தைச் சீரமைக்க விரும்புகிறது.
சிலாங்கூர் குடிமக்களுக்கு கட்டுப்படியான விலையில் குடிநீர் கிடைப்பதை உறுதிப்படுத்த அது அவசியம் என்று அது நினைக்கிறதுஅச்.சீரமைப்புக்கு ஒப்புதல் தெரிவித்தால் லங்காட்2 சுத்திகரிப்பு ஆலைக்கு ஒப்புதல் அளிக்கத் தயார் என சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் கூறியுள்ளார்.
அதற்கு “வாங்குபவர்-விற்பவர் அடிப்படையில்தான்” தீர்வு காண வேண்டும் என்றும் நிர்வாகத்தை எடுத்துக்கொள்ள சிலாங்கூர் கொடுக்க முன்வரும் விலை ஸபாஷுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியது.
ஆனால், ஸபாஷும் அதன் தாய் நிறுவனமான புஞ்சாக் நியாகாவும் சிலாங்கூர் வழங்க முன்வந்த ரிம9.2பில்லியனை மிகவும் குறைவு என்று கூறி நிராகரித்து விட்டன.
ஜப்பானிய நிறுவனத்துக்கு நல்ல பெயர் இல்லை
இதனிடையே நிலத்தடியில் 45கீமீ குழாய்களைப் பொருத்துவதற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கிவிட்டது.நான்கு நிறுவனங்களைக் கொண்ட ஜப்பானிய குழுமம் ஒன்று அப்பணியை மேற்கொண்டிருக்கிறது.அந்நிறுவனங்களில் ஒன்றுக்கு வெளிநாடுகளில் அவ்வளவாக நல்ல பெயர் இல்லை.
அந்நிறுவனம்- Nishimatsu Construction Co-கையூட்டு பெற்றதன் தொடர்பில் ஜப்பானில் விசாரணைக்கு இலக்கானது.அதன் தலைவர் மிக்கியோ குனிசாவா உள்பட பல உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
2005-இல் சிங்கப்பூரில் நிக்கோல் நெடுஞ்சாலை இடிந்து விழுந்த சமபவம் மீது நடைபெற்ற பொது விசாரணையில் அந்நிறுவனம் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றவில்லை எனவும் குற்றஞ் சாட்டப்பட்டது.
நான்கு நிறுவனங்களில் மற்ற மூன்று ஜப்பானின் ஷிமுசு கார்ப், உள்ளூர் கட்டுமான நிறுவனங்களான யுஇஎம் பில்டர்,ஐஜிஎம் கார்ப் ஆகியவையாகும்.