பெர்க்காசா த ஸ்டார் ஆங்கில மொழி நாளேட்டை இஸ்லாத்திற்கு பகைவன் எனக் கண்டித்துள்ளது. ரமதான் மாத உணவு வகைகள் பற்றிய அதன் சிறப்பு வெளியீட்டில் தவறுதலாக பன்றி இறைச்சி உணவு பற்றிய ஒரு கட்டுரை இடம் பெற்று விட்டது தொடர்பில் பெர்க்காசா அவ்வாறு கண்டித்துள்ளது.
“நாம் அந்த நாளேட்டை இஸ்லாத்துக்கு எதிரான பத்திரிக்கை” என முத்திரை குத்த வேண்டும் என பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி சொன்னார்.
“அது தவறு எனக் கூறப்படும் விளக்கத்தை நான் ஏற்கவில்லை. யார் த ஸ்டாருக்கு ஆசிரியர் என்பது எங்களுக்குத் தெரியும்.'”
“அவர்கள் முஸ்லிம்களுடைய சகிப்புத்தன்மையின் எல்லையை அவர்கள் சோதிப்பதாக நான் எண்ணுகிறேன்.”
கோலாலம்பூரில் உள்ள சுல்தான் சுலைமான் கிளப்பில் பெர்க்காசா உச்சமன்றக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பின்னர் இப்ராஹிம் நிருபர்களிடம் பேசினார்.
அந்த நாளேடு செய்துள்ள தவறு இஸ்லாத்துக்கு விடுக்கப்பட்டுள்ள “அப்பட்டமான சவால்” என வலியுறுத்திய அவர், அது “அடிக்கடி இஸ்லாம் மீது தாக்குதல்” தொடுப்பதாகவும் சொன்னார்.
ஆகவே “இஸ்லாத்தின் பாதுகாவலர் என்னும் பணியை பெர்க்காசா மீண்டும் எடுத்துக் கொள்வது அவசியம்” என்றும் வலியுறுத்திய இப்ராஹிம், அந்தப் பொறுப்பை நிறைவேற்ற பாஸ் கட்சி தவறி விட்டதாகச் சொன்னார்.
“கிளந்தான் மந்திரி புசாருக்கு இஸ்லாம் பற்றி இனி அக்கறையில்லை. அவர் இப்போது வாக்குகளுக்காக போராடுகிறார். அதற்காக அவர் எதனையும் விட்டுக் கொடுப்பார்”, என்றார் அவர்.
தமது அமைப்பு மலாய் முஸ்லிம்களுடைய “கடைசி தற்காப்பு அரண்” என்றும் தம்பட்டம் அடித்துக் கொண்ட அவர், “மலாய்க்காரர்களின் துன்பத்தை” பாலஸ்தீனர்கள் எதிர்நோக்கும் அவலத்துடன் ஒப்பிட்டுப் பேசினார்.
“நாங்களும் ஒரு பெர்சேயை நடத்துவோம்”
இதனிடையே நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் மூன்று விஷயங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தையும் சட்டத்துறைத் தலைவரையும் கேட்டுக் கொள்ளும் தீர்மானம் ஒன்றை பெர்க்காசா உச்சமன்றம் நிறைவேற்றியுள்ளதாகவும் இப்ராஹிம் அறிவித்தார்.
1) பெர்சே 2.0 தேர்தல் சீர்திருத்தப் பேரணி, அதன் தலைவர் எஸ் அம்பிகா.
2) எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் காணப்படுவதாகக் கூறப்படும் செக்ஸ் வீடியோ விவகாரம்.
3) பினாங்கில் கிறிஸ்துவப் பாதிரியார்களுக்கும் டிஎபிக்கும் இடையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் சந்திப்பு.
“அரசாங்க நடவடிக்கை ஏதுமில்லாமல் நீண்ட காலத்துக்கு அவை தொடருவதாக பெர்க்காசா கருதுகிறது. ஆகவே அவர்கள் இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“சட்டத்துறைத் தலைவர் அந்த விஷயங்களை நீதி மன்றங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். போதுமான ஆதாரம் இருக்கிறதா இல்லையா என்பதை நீதிமன்றங்கள் முடிவு செய்யட்டும்.”
“அந்த விவகாரங்கள் மீது நியாயமான காலத்துக்குள் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் பெர்சே மக்கள் செய்ததைப் போல பெர்க்காசாவும் ஏதாவது செய்யும்.”
“அவ்வாறு நிகழ்ந்தால் அரசாங்கம் குறை கூறக் கூடாது”, என இப்ராஹிம் எச்சரித்தார்.
பின்னர் நடைபெற்ற சிறிய சடங்கு ஒன்றில் பெர்க்காசா இளைஞர்கள் த ஸ்டார் நாளேட்டின் பிரதிகளுக்கு எரியூட்டினர். அந்த ஏட்டின் நிர்வாகம் இன்னும் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
“அவர்கள் அந்த விஷயத்தைக் கடுமையாகக் கருத வேண்டும். இதில் இஸ்லாம் சம்பந்தப்பட்டுள்ளது. இந்த நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் இனத்தையும் மதியுங்கள்”, என பெர்க்காசா இளைஞர் தலைவர் இர்வான் இட்ரிஸ் கேட்டுக் கொண்டார்.
இர்வான் தனிப்பட்ட முறையில் கிரிஸ் கத்தி ஒன்றை எடுத்து அந்தப் பத்திரிக்கையின் பிரதி ஒன்றை பல முறை குத்திய பின்னர் அதற்கு எரியூட்டினார்.