எம்சிஎம்சி விளக்கம் மீது வீடியோ தயாரிப்பாளர் ஆத்திரமடைந்துள்ளார்

வாக்களியுங்கள் என்ற ‘Undilah’ பொதுச் சேவை அறிவிப்பு வீடியோவை தயாரித்த பீட் தியோ,  அந்த வீடியோவை ஒளிபரப்ப வேண்டாம் என ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள உத்தரவு குறித்து மலேசியப் பல்லூடக, தொடர்பு ஆணையம் (எம்சிஎம்சி) அளித்த விளக்கம் மீது ஆத்திரமடைந்துள்ளார்.

அந்த பொதுச் சேவை ஒளிநாடா ஒளிபரப்பாவதற்கு முன்னரே எம்சிஎம்சி அதன் ஒளிபரப்பை எம்சிஎம்சி நிறுத்தி விட்டதே தமது ஆத்திரத்துக்குக் காரணம் என அவர் சொன்னார்.

“இது வரை என்டிவி 7 மட்டுமே அதன் ஒரு நிமிடப் பதிப்பை செய்தியாக ஒளிபரப்பியுள்ளது. நாங்கள் அடுத்த வாரம் தான் தொலைக்காட்சி நிலையங்களுடன் பேச விருக்கிறோம்,”  (அதனை முழு விளம்பரமாக ஒளிபரப்புவது பற்றி) என்றார் அவர்.

அந்த ஒளிநாடாவை திரைப்படத் தணிக்கை வாரியம் அங்கீகரிக்காததால் அதனை மீட்டுக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டது என இன்று காலை எம்சிஎம்சி ஒர் அறிக்கையில் கூறியது.

ஆனால் தியோ எம்சிஎம்சி – யின் உத்தரவு குறித்து குழப்பம் அடைந்துள்ளார். ஏனெனில் தாம் முதலில் திரைப்படத் தணிக்கை வாரியத்துக்கு விண்ணப்பிக்கவே இல்லை என அவர் குறிப்பிட்டார்.

“எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. காரணம் அதற்கு விண்ணப்பிக்கவே இல்லை. நாங்கள் ஒளிபரப்பாளர்களுடன் இன்னும் பேசாத நிலையில் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமே இல்லை.”

“நாங்கள் ஒளிபரப்பாளர்களுடன் பேசுவதற்கு முன்னரே அந்தப் பொதுச் சேவை அறிவிப்பைப் பயன்படுத்த வேண்டாம் என முன் கூட்டியே ஏன் ஒளிபரப்பாளர்களுக்கு ஏன் உத்தரவிடுகிறது ?” என தியோ வினவினார்.