சுவாராம்மீது சட்ட நடவடிக்கை எடுக்க அரசுத்துறைகள் தவறாக பயன்படுத்திக்கொள்ளப்படுகின்றன

பிஎன்,அரசுத்துறைகளை ஒவ்வொன்றாக பயன்படுத்தி  அடிப்படை மனித உரிமைக்காக போராடும்  அரசுசாரா அமைப்பான (என்ஜிஓ) சுவாராம்மீது விசாரணை நடத்துவது ஓர் அதிகார அத்துமீறலாகும் என்கிறார் சுவாராம் இயக்குனர் குவா கியா சூங்.

ஒரு ஜனநாயக சமுதாயத்தில் பொதுத் துறைகள் ஆளும் கட்சிகளின் செல்வாக்குக்கு உட்பட்டவையாக இருத்தல் கூடாது என்றாரவர்.

“ஜனநாயக சமுதாயத்தில் அரசு ஊழியர், அரசுக்கு அப்பால் சுயேச்சையாக செயல்படுவராக இருத்தல் வேண்டும்.

“ஆனால்,இங்கு அரசாங்கம் மலேசிய நிறுவனங்கள் ஆணையத்தையும்(சிசிஎம்), சமூகப் பாதுகாப்பு நிறுவனத்தையும்(சொக்சோ), வருமான வரி வாரியதையும் (எங்கள்மீது) விசாரணை செய்யுமாறு ஏவி விடுவதைப் பார்க்கிறோம்.

“இப்போது அமைச்சர் பேங்க் நெகாராவும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என விரும்புகிறார்.இது பொதுச்சேவைத்துறைகள் முழுமையாக தவறாகப் பயன்படுத்திக்கொள்ளப்படுவதற்குச் சான்றாகும்”.குவா இன்று கோலாலம்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் இவ்வாறு கூறினார்.

நாணய ஊக வணிகரான ஜார்ஜ் சோரோஸ் சுவாராமுக்கு பணஉதவி செய்வதாகக் கூறப்படுவதை பேங்க் நெகாரா விசாரணை செய்ய வேண்டுமென்று உள்நாட்டு வாணிப,கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப் கூறியிருந்ததற்கு எதிர்வினையாற்றியபோது குவா இவ்வாறு தெரிவித்தார்.

தம் அமைச்சு அதன் விசாரணைகளில் 2007-இலிருந்து 2010வரை சோரோஸிடமிருந்து சுவாராம் ரிம558,500பெற்றிருப்பதைக் கண்டுபிடித்திருப்பதாக இஸ்மாயில் கூறினார்.

TAGS: