ரபிஸி:அடுத்து அம்பலமாகிறது நெகிரி செம்பிலான் எம்பி ஊழல் விவகாரம்

பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி, இன்னும் இரண்டு வாரங்களில் மேலும் ஒரு விவகாரத்தை அம்பலப்படுத்த ஆயத்தமாகி வருகிறார்.அது “நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகம்மட் ஹசான் சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரம்”.

நேற்று, சிரம்பானில் பிகேஆர் ஏற்பாடு செய்திருந்த ஒரு விருந்தில் 300-பேரிடையே பேசிய ரபிஸி, “நான் போகுமிடமெல்லாம் அடுத்து அம்பலமாகும் ஊழல் பற்றி மக்கள் கேட்கிறார்கள்”, என்றார்.

“நெகிரி செம்பிலான் பாஸ் ஆணையர் முகம்மட் தஃபெக் அப்துல் கனி,(மாநில) பிகேஆர் தலைவர் கமருல் பஹாரின் அப்பாஸ் ஆகியோருக்கும் மற்ற  பக்காத்தான் ரக்யாட் ஆதரவாளர்களுக்கும் ஒரு நல்ல செய்தி.இன்னும் ஒன்றிரண்டு வாரங்களில் முகம்மட் ஹாசன்(வலம்) சம்பந்தப்பட்ட ஊழலை வெளிப்படுத்துவேன்”.

அவர் அப்படி சொன்னதும் கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 

இதற்குமுன் ரபிஸி, நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) நெகிரி செம்பிலான் கிம்மாஸில் மாடுவளர்புக்காக அரசாங்கத்திடமிருந்து ஏளிய நிபந்தனைகளில் பெற்ற ரிம250மில்லியன் கடனைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்ட விவகாரத்தை அம்பலப்படுத்தினார் என்பது தெரிந்ததே..

அதன் தொடர்பில் அவரும் பிகேஆர் மகளிர் தலைவி சுரைடா கமருடினும்  ரிம100மில்லியன் அவதூறு வழக்கை எதிர்நோக்கியுள்ளனர்.வழக்குத் தொடுத்தவர் முன்னாள் அமைச்சர் ஷரிசாட் அப்துல் ஜலில். ஷரிசாட், என்எப்சி செயல்முறை தலைவர் முகம்மட் சாலே இஸ்மாயிலின் துணைவியார் என்பதுடன் அம்னோ மகளிர் தலைவியுமாவார்.

நேற்றிரவு ரபிஸி(இடம்)அவ்வழக்கின் நிலை பற்றி விவரித்தார்..என்எப்சி வழக்குரைஞர், வழக்கை சற்று நிறுத்தி வைக்குமாறு தம் வழக்குரைஞர்களைக் கேட்டுக்கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.

“பொதுத் தேர்தல் நெருங்கி வருவதால், ஷரிசாட்டால் அம்னோவுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கப் பார்க்கிறார்கள்’, என்றாரவர்.

“விசாரணையில்,அவர் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுக்குப் பொறுப்பேற்ற முதல் அமைச்சர் என்று பெருமையுடன் கூறிக்கொண்டார்.

“ஆனால்,குறுக்கு விசாரணையில் தம் மகன் என்எப்சியில் வேலை செய்வதோ, தம் கணவர் என்எப்சி திட்டத்துக்கு விண்ணப்பம் செய்தார் என்பதோ தமக்குத் தெரியாது என்றார்.

“மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சராக இருப்பவர், தம் குடும்பத்தில் நடப்பதும் மகன் என்ன செய்கிறார் கணவர் என்ன செய்கிறார் என்பதும் தமக்குத் தெரியாது என்று சொல்லக்கேட்டு அம்னோவில் சில தரப்பினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

“அதன் விளைவாக அம்னோவின் ஆதரவில் 5விழுக்காடு பக்காத்தான் ஆதரவாக மாறியுள்ளது”,என்றார்.

அவ்விருந்தில் முன்னாள் தகவலமைச்சர் அப்துல் ஷேக் பாட்சிரும் உரையாற்றினார்.அவர் முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானின் உயர்ந்த கொள்கைகளை எடுத்துரைத்தார்.

“அவர் தேர்தல்கள் சுதந்திரமாக நடப்பதை உறுதிப்படுத்தினார்.பதவி விலகியதும் செய்தித்தாள்களுக்குக் கட்டுரை எழுதினார். ஏன் என்று கேட்டதற்கு பணம் தேவைப்படுகிறது.அதுதான் என்றார்.அவர்தான் துங்கு அப்துல் ரஹ்மான்.

“நான் டாக்டர் மகாதிர் அமைச்சரவையில் இருந்தபோது, துங்குவை அம்னோவில் மீண்டும் சேரும்படி வற்புறுத்தினேன்.அவர் மறுத்து விட்டார்.

“உசேன் ஒன்னை மீண்டும் அம்னோவில் சேர்க்க முயன்றேன்.அவரும் மறுத்தார்.இருவருமே அம்னோவை விரும்புவதாகக் கூறினார்கள்.ஆனால், கட்சியின் போராட்டம் சுதந்திரத்துக்காக போராடிய காலத்தில் இருந்ததுபோல் இல்லை என்று கூறினர்.

“அவர்களின் இறப்பின்போது அவர்கள் அம்னோ உறுப்பினர்களாக இல்லை.அதனால் என்னைப் போன்றவர்கள் அம்னோவைவிட்டு விலகுவது ஒன்றும் பெரிய விவகாரமல்ல”, என்றார்.

அப்துல் காடிர் மார்ச் மாதம் அம்னோவிலிருந்து விலகி, ஜூனில் ஈக்காத்தான் என்னும் பெயரில் புதிய கட்சி தொடங்கினார்.