அம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயர்ந்த விருது

மனித உரிமைக்காக வாதாடும் மலேசிய பெர்சே 2.0 இயக்கத்தின் தலைவரான அம்பிகாவின் சேவையை அங்கீகரித்து அவருக்கு பிரான்ஸ் அந்நாட்டின் மிக உன்னத செவாலியர் (Chevalier de Legion d’Honneur) விருதை வழங்கி கௌரவித்துள்ளது. இவ்விருது அந்நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதாகும்.

நேற்று, கோலாலம்பூர் பிரன்ச் தூதரகத்தில் அவ்விருதை பெற்றுக்கொண்டு உரையாற்றிய அம்பிகா அவ்விருது தனக்கானது அல்ல, அது அனைத்து சிவில் சமுதாயத்திற்குமானதாகும் என்று கூறினார்.

“இக்கௌரவம் மலேசிய சிவில் சமுதாயத்திற்கு உரித்ததாகும். சிவில் சமுதாயம் ஆற்றி வரும் பணியைப் போற்றுதல் முக்கியமானதாகும் என்று நான் கருதுகிறேன்.”

இக்கட்டத்தில், உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராக நீண்ட காலமாக போராடி வந்த மலேசிய வழக்குரைஞர் மன்றத்தையும் அவர் குறிப்பிட்டார். அப்போது இவ்விவகாரத்தில் அதன் குரல்  “தனிமையில் ஒலித்தது” என்றாரவர்.

அம்பிகாவுக்கு இவ்விருதை வழங்கிய மலேசியாவுக்கான பிரன்ச் தூதர் மார்க் பாரெட்டி அவர் “இவ்விருதைப் பெறுவதற்கான உரிமையைப் பெற்றுள்ளார், ஏனென்றால் அவர் மனித உரிமையின் வலிமைவாய்ந்த ஆதரவாளரும் தற்காப்பாளருமாவார்”, என்று கூறி பாராட்டினார்.

பூர்வீக குடிமக்களுக்காக (ஓராங் அஸ்லி) அம்பிகா ஆற்றி வரும் பணியையும் பிரன்ச் தூதர் அவரது உரையில் குறிப்பிட்டார். அம்பிகாவும் அவரது உரையில் ஓரங்கட்டப்பட்டுள்ள பூர்வீக குடிமக்களுக்கான சிவில் சமுதயத்தின் போராட்டம் தொடரும் என உறுதியளித்தார்.

இதுவரையில், பிரன்ச் நாட்டின் இந்த உயரிய விருது 25 மலேசியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்று பாரெட்டி கூறினார். அவர்களில் பேரரசர், உயர்தர இராணுவ அதிகாரிகள் மற்றும் மிசேல் இயோ போன்ற பிரமுகர்களும் அடங்குவர் என்றும் அவர் கூறினார்.