ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி இவ்வாண்டு அமலாக்கப்பட மாட்டாது. ஏனெனில் அரசாங்கம் அந்த புதிய வரி விதிப்பு முறை பற்றி மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பது மீது கவனம் செலுத்தி வருகின்றது.
இவ்வாறு நிதித் துணை அமைச்சர் டொனால்ட் லிம் சியாங் சாய் கூறியிருக்கிறார்.
“நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்புக்கு ஜிஎஸ்டி மசோதாவைத் தாக்கல் செய்வதற்கு முன்னர் ஜிஎஸ்டி குறித்து மலேசியர்கள் முழுமையாக அறிந்து கொள்வதை காண நாங்கள் விரும்புகிறோம்.”
“அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அது தாக்கல் செய்யப்படும் சாத்தியம் இல்லை. காரணம் விழிப்புணர்வு இயக்கம் அதற்குள் நிறைவு பெறாது,” என அவர் ஆசிய வியூக தலைமைத்துவ ஆய்வியல் கழகம் ஏற்பாடு செய்துள்ள 2012 CFO உச்ச நிலைக் கூட்டத்தை தொடக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
“குத்தகையாளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தாமதப்படுத்த வேண்டாம் என அமைச்சுக்களுக்கும் அரசாங்க அமைப்புக்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது,” என்றும் லிம் அப்போது அறிவித்தார்.
“அது உரிய நேரத்தில் கொடுக்கப்பட வேண்டும். காரணம் ரொக்கம் என்பது அவர்களுக்கு குறிப்பாக சிறிய குத்தகையாளர்களுக்கு ‘ரத்தத்தை’ போன்றது.”
“அரசாங்க அமைப்புக்கள் மட்டுமின்றி தனியார் துறையும் ஜப்பான், ஜெர்மனி ஆகியவற்றில் உள்ள அரசாங்க அமைப்புக்களும் நிறுவனங்களும் பின்பற்றும் வழிகளை எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டும்,” என்றார் அவர்.