மலாக்கா ஜாசினில், பிகேஆர் பிரச்சாரப் பேருந்தின்மீது சிவப்புச் சாயத்தை வீசியடித்தவர்களைச் சரணடையுமாறு போலீஸ் கேட்டுக்கொண்டிருக்கிறது.இல்லையேல் அவர்கள் தேடிப் பிடிக்கப்படுவர்.
அச்சந்தேகப் பேர்வழிகளைப் போலீஸ் அடையாளம் கண்டிருப்பதாக கூட்டரசு குற்றப்புலன் விசாரணைத் துறை இயக்குனர் முகம்மட் பக்ரி முகம்மட் ஸினின் கூறினார்.
“அதைச் செய்தவர்கள் தாமே முன்வந்து விசாரணைக்கு உதவ வேண்டும்.நாங்கள் தேடிப்பிடிப்பதைவிட அவர்களே சரணடைவது நல்லது”, என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
நேற்று, பிகேஆர் பரிவாரத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரை அடையாளம் காண்பித்தார்.
அந்த இரு-மாடி பேருந்தை ஜாசின், கம்போங் ரிம்மில் இடைமறித்த இளைஞர் கூட்டம் அதன்மீது சாயத்தை வீசியடித்தது.
அச்சம்பவத்தால் அங்கு நிலைமை பதற்றம் அடைந்தது.அன்வார் இப்ராகிமின் மெய்க்காவலர்களில் ஒருவர் தன் துப்பாக்கியை எடுத்து தாக்குதல்காரர்களைக் குறி வைத்ததாகக் கூறப்படுகிறது.அப்போது அங்கு வந்த போலீசார் அவரிடமிருந்து துப்பாக்கியைப் பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனர்.
அதற்கு ஒரு வாரத்துக்குமுன்பு, கிளந்தான் கோத்தா பாருவில் பிகேஆர் பேருந்துமீது சிவப்புச் சாயம் வீசியடிக்கப்பட்டு அதன் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.
மரண விசாரணைக்குக் கோரிக்கை விடுக்கலாம்
ஆகஸ்ட் 21-இல் அம்பாங்கில் டி.தினேஷ் போலீசால் சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக நடைபெறும் விசாரணையில் திருப்தி அடையாதவர்கள் மரண விசாரணை நடத்த கோரிக்கை விடுக்கலாம் என்றும் பக்ரி கூறினார்.
போலீசார் அவர்களின் புலன் விசாரணையை முடித்து மேல் நடவடிக்கைக்காக விசாரணை அறிக்கையை ஒப்படைத்து விட்டார்கள்.
“எங்களுக்கென விதிமுறைகள் உண்டு….விசாரணை அறிக்கை ஒப்படைத்து விட்டோம்.மரண விசாரணை தேவையா என்பதை அறிய காத்திருக்கிறோம்”.
தினேஷ், அம்பாங்கில் ஆகஸ்ட் 21-இல் தலையிலும் தோளிலும் சுடப்பட்டு இரண்டு நாள் கழித்து அம்பாங் மருத்துவமனையில் இறந்தார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை நேரில் பார்த்த அவரின் நண்பர்கள், சாதாரண உடை அணிந்திருந்த போலீசார் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை என்றும் அவர்கள் 10தடவை கண்மூடித்தனமாக சுட்டனர் என்றும் கூறினர்.
ஆனால், போலீசார் தினேஷ் 14 கார்களுடன் பாண்டான் பெர்டானா நோக்கி சில மணி நேரத்துக்கு முன்னால் அங்கு நடந்த சண்டையைத் தொடர்வதற்காக சென்று கொண்டிருந்தார் என்று தெரிவித்தனர்.
தினேஷ் பயணம் செய்த கார் பின்னோக்கிச் சென்று போலீஸ் காருடன் மோத முயன்றதாகவும் அதிலிருந்து நால்வர் இறங்கி பாராங்களையும் இரும்புக் கம்பிகளையும் கொண்டு போலீஸ் காரைத் தாக்கினார்களாம்.
தினேஷின் குடும்பத்தார் அச்சம்பவத்தை ஒரு கொலையாகக் கருத வேண்டும் என்று கூறியுள்ளனர்.