கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்ட 2012ம் ஆண்டுக்கான அமைதியாக ஒன்று கூடும் சட்டம் குறித்து அமைதியாக ஒன்று கூடும் உரிமைகள் மீதான சிறப்பு ஐநா அனுசரணையாளர் மைனா கியாய் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய அந்தச் சட்டத்தில் அனைத்துலக மனித உரிமைகள் தரத்தை கொண்டிராத பகுதிகளும் இருப்பதாக அவர் கருதுகிறார்.
“அந்தச் சட்டம் ஒன்று கூடுவதற்கு வசதி செய்து கொடுக்கும் நோக்கத்துடன் இயற்றப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக கட்டுபடுத்துவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. எனக்கும் ஐநா-வுக்கும் அதுதான் அடிப்படைப் பிரச்னை ஆகும்,” என அவர் கடந்த வாரம் மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் சொன்னார்.
“அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது ஏமாற்றத்தைத் தருகின்றது. என்றாலும் திருத்தங்களுக்கும் மாற்றத்திற்கும் இடம் உள்ளது.”
“இயல்பான நாட்களுக்கு இடையூறு செய்வதே அமைதியாக ஒன்று கூடுவதின் அர்த்தம் என நான் பல முறை பகிரங்கமாக கூறியுள்ளேன். அதன் நோக்கமும் அதுதான்.”
“ஆகவே அந்த இடையூறை குறைத்து வசதி செய்து கொடுப்பதே அதிகாரிகளுடைய கடமையாகும். போக்குவரத்தைப் பாதிக்கக் கூடாது என ஒருவர் வாதாடலாம். ஆனால் சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு குடி மக்களுக்கு உரிமை உண்டு,” என கியாய் வலியுறுத்தினார்.
பிரபலமான கென்யா வழக்குரைஞரான அவர் கடந்த ஆண்டு மே மாதம் ஐநா சிறப்பு அனுசரணையாளராக நியமிக்கப்பட்டார்.
“குடிமக்கள் தங்களது பொருளாதார, சமூக, பண்பாட்டு மனக்குறைகளை வெளிப்படுத்துவதற்கு ஒன்று கூடுவது மிகவும் முக்கியமாகும்.”
அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தில் எந்த அம்சங்கள் அவருக்கு ஏமாற்றம் அளிப்பதாக கியாய்-இடம் வினவப்பட்டது.
அதற்கு அவர் உத்தேசக் கூட்டம் பற்றி பத்து நாட்களுக்கு முன்பு போலீசாருக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதையும் ஊர்வலங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையையும் சுட்டிக் காட்டினார்.
“பேரணி என்பது சொற்பொழிவுகளை மட்டும் சார்ந்திருக்கவில்லை. நீங்கள் நடந்தும் செல்லலாம். அந்தச் சட்டத்தில் ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கருதுகிறேன். அது அனைத்துலக நடைமுறைகளுக்கு முரணானதாகும்.”
“அந்த நிகழ்வுக்கு 10 நாட்கள் முன்னதாக போலீசாருக்கு ஏன் தகவல் கொடுக்கவில்லை என ஏற்பாட்டாளர்களை விசாரிப்பது இன்னொரு மோசமான நடைமுறையாகும். நீங்கள் அப்படிச் செய்யக் கூடாது.”
“ஒன்று கூடுவதற்கு வசதி செய்து கொடுப்பதே போலீசாருடைய பணியாகும். அதனை கட்டுப்படுத்துவது அல்ல. குடிமகன் என்ற முறையில் நீங்கள் ஒன்று கூடும் உரிமையை அந்தச் சட்டம் கொடுக்க வேண்டும். அதனைப் பறிக்கக் கூடாது,” என்றா கியாய்.
“நூறாயிரக்கணக்கில் மக்கள் பேரணியில் கலந்து கொண்டால் கவலை அளிக்கக் கூடிய முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது என அர்த்தம்.”
கூட்டங்கள் விரக்தியை வெளிப்படுத்தும் வழிகள்
ஆர்ப்பாட்டங்கள் அவசியமானவை எனக் குறிப்பிட்ட கியாய், காரணம் அவை மக்கள் தங்கள் வெறுப்பை அமைதியாக வெளிப்படுத்துவதற்கு வழிகளை அமைத்துக் கொடுக்கின்றன என்றார்.
“நீங்கள் கட்டுப்பாடுகளை விதித்து இல்லை இல்லை என்று சொன்னால் உண்மையில் பதற்றத்தை அதிகரிக்கின்றீர்கள். பதற்றம் இல்லாத நாடு என எதுவும் இல்லை. அவற்றை மக்கள் வெளிப்படுத்த வழி வகுத்துக் கொடுப்பது அரசாங்கத்தின் வேலையாகும்.”
“மக்கள் தங்கள் வெறுப்பை வெளிப்படையாக அமைதியாக வெளியிட அனுமதிப்பதே நல்லது,” என அவர் மேலும் சொன்னார்.
மலேசியா பல இன, பல சமய நாடாக இருப்பதால் அத்தகையக் கூட்டங்கள் கலவரங்களாக மாறக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ள கவலை பற்றிக் குறிப்பிட்ட கியாய், வெறிப்புணர்வு, வன்முறை மூலம் மக்களைத் தூண்டி விடும் குழுக்கள் இருந்தால் நாம் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது, அனுமதிக்கக் கூடாது என்றார்.
என்றாலும் தங்கள் மக்களிடையே ஒரளவு பல்வகைத் தன்மை இல்லாத நாடுகள் உலகில் மிகவும் குறைவு என அவர் வலியுறுத்தினார்.
“அந்த பல்வகைத்தன்மையை நிர்வாகம் செய்வது அரசின் கடமையாகும்.”
“மக்கள் தங்கள் விரக்தியை வெளிப்படுத்துவதற்கு நீங்கள் கட்டுப்பாடு விதித்தால் தகராறு மூளும். இது ஏவுகணை விஞ்ஞானம் அல்ல. எதிர்ப்பைத் தெரிவிக்க நீங்கள் இடங்களை உருவாக்க வேண்டும். அவற்றை நீங்கள் நாகரிகமான முறையில் சமாளிக்க வேண்டும்.”
“மலேசியா கடந்த 55 ஆண்டுகளில் மகத்தான வெற்றிகளை அடைந்துள்ளது. எதிர்ப்பை கட்டுப்படுத்துவதற்குப் பதில் அதனை சமாளிப்பதே சிறந்தது.”
மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும் கருத்துத் தெரிவிக்கவும் அனுமதிக்கப்பட்ட விட்டால் அவர்கள் ரகசியமாக இயங்கத் தொடங்குவர்,” என கியாய் வருத்தமுடன் சொன்னார்.