வாரிசான் மெர்டேகா கட்டிடத்தின் உயரம் 600மீட்டராக திருத்தம் செய்யப்பட்டிருப்பதை பெர்மோடாலான் நேசனல் பெர்ஹாட் (பிஎன்பி) நேற்று உறுதிப்படுத்தியது.இதனால்,அது உலகின் உயரமான கட்டிடங்கள் வரிசையில் மூன்றாம் இடத்தைப் பெறும் வாய்ப்பு உள்ளது.
ஆனால், அந்த அரசுத்தொடர்புள்ள நிதி நிர்வாக நிறுவனம், அக்கட்டிடம் 120தளங்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுவதை மறுத்தது.
“திட்டம் தொடங்கப்பட்டபோது 509மீட்டர் உயரத்துக்குக் கட்டுவதாக இருந்தது.
“அதன்பின்னர் அதன் உயரத்தை 600மீட்டராகத் திருத்தினோம். கூடுதல் உயரத்தில் கூம்புவடிவ கோபுரம் மட்டுமே அமைக்கப்படும்”,என்று மலேசியாகினியில் வினவலுக்கு பிஎன்பி பதிலளித்தது.
மினாரா மெர்டேகாவில் பயன்பாட்டுக்கு உரிய 100 தளங்கள் மட்டுமே இருக்கும் என்பதையும் அந்நிறுவனம் தெளிவுப்படுத்தியது.
“எனவே உயரம் கூடுவதால் பயன்பாட்டுக்குரிய தளங்களின் எண்ணிக்கை அதிகரிக்காது”.
பாரம்பரிய சொத்துக்களைப் பாதுகாக்க போராடும் தியோ சீ ஹோங் வாரிசான் மெர்டேகாவின் உயரம் கூட்டப்படுவதால் அதன் தளங்களும் 102-இலிருந்து 120ஆக உயரும் என்று கூறிவருவதற்கு மறுமொழியாக அது இவ்வாறு கூறியது.
600மீட்டர் உயரத்தில் மினாரா மெர்டேகா உலகின் மூன்றாவது மிக உயர்ந்த கட்டிடமாக விளங்கும்.ஐக்கிய அரபு அமீரகத்தின்(யுஏஇ) புர்ஜ் காலிபா(828மீட்டர்), சவூதி அராபியாவின் அரச குளோக்டவர் ஹாட்டல்(601மீட்டர்) ஆகிய இரண்டு மட்டுமே அதை விட உயரமானவை.
ஆனால்,2004-இலிருந்து 2010வரை உலகின் உயரமான கட்டிடமாகவும் இப்போதைக்கு மூன்றாவது உயரமான கட்டிடமாகவும் விளங்கும் 509 மீட்டர் கொண்ட தைப்பே 101-ஐவிட மினாரா மெர்டேகா உயரமானதாக இருக்கும்.
ஆனால்,அந்தப் பெருமை நீடிக்குமா என்பது கேள்விக்குறியே. மினாரா மெர்டேகா ஆசியாவிலேயே கடும் போட்டியைச் சந்திக்க நேரும். சீனாவிலும் இந்தியாவிலும் 600மீட்டர் உயரம் கொண்ட பல வானளாவிகள் கட்டப்பட்டு வருகின்றன.
பிரதமரும் நிதி அமைச்சருமான நஜிப் அப்துல் ரசாக் 2010 பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றியபோது ரிம5பில்லியனில் 100மாடி கட்டும் திட்டத்தை முதலில் அறிவித்தார்.
அப்போது அதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.அரசாங்கம் மானாவாரியாக செலவிடுகிறது என்று குறைகூறிய மாற்றரசுக் கட்சியினர் ரிம5பில்லியனைச் சமூக நலத்துக்கும் கல்விக்கும் பொதுப்போக்குவரத்தை மேம்படுத்தவும் செலவிடலாம் என்றனர்.
அத்திட்டத்தைத் தற்காத்துப் பேசிய நஜிப், அது வீண் விரயமல்ல என்றும் அதன்வழி பன்மடங்கு நன்மை பொருளாதாரத்துக்குக் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.