குற்றச் செயல்கள் முதலீட்டாளர்களுக்கும் கவலையை அளித்துள்ளது

இந்த நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து அந்நிய முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளதாக அனைத்துலக வாணிக தொழிலியல் அமைச்சர் முஸ்தாப்பா முகமட் கூறியிருக்கிறார்.

பல அந்நிய வர்த்தக சங்கங்கள், போலீஸ் ஆகியவற்றுடன் அமைச்சு நடத்தி வரும் மாதாந்திரக் கலந்துரையாடலைத் தொடக்கி வைத்த போது அவர் அதனைத் தெரிவித்தார்.

கடந்த ஒர் ஆண்டில் நடத்தப்பட்ட பல கலந்துரையாடல்களின் போது முதலீட்டாளர்கள் குற்றச் செயல்கள் குறித்து பல முறை கவலை தெரிவித்துள்ளதாக அவர் சொன்னார்.

“வர்த்தக சங்கங்களுடன் நாங்கள் இதற்கு முன்னர் நடத்திய கலந்துரையாடல்களின் போது பாதுகாப்பு விவகாரம் முதலீடுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை அறிந்து கொண்டது நாம் இங்கு கூடியிருப்பதற்குக் காரணம்.”

“அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண கூட்டம் நடத்தப் போவதாக நான் உறுதி அளித்தேன். நாட்டில் நிலைமையை சீர்படுத்துவதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்பதை ஆய்வு செய்வதற்காக நாம் இங்கு கூடியுள்ளோம்,” என்றார் அவர்.

தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார், குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி) துணைத் தலைவர் ஹாடி ஹோ அப்துல்லா, கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் முகமட் சாலே, கோலாலம்பூர் சிஐடி தலைவர் கூ சின் வா ஆகியோரும் அந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர்.

ஜப்பானிய, தென் கொரிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஜெர்மானிய, தைவானிய வர்த்தக சங்கங்களின் பேராளர்களும் அங்கு இருந்தனர்.