பெர்னாண்டஸ்: எதிரியைச் சந்திக்க ஏர் ஏசியா தயார்

ஏர் ஏசியா தலைவர் டோனி பெர்னாண்டஸ், இந்தோனேசியாவின் லயன் ஏர் தொடங்கும் சிக்கன விமானப் பயண நிறுவனத்துக்குக் கடும் போட்டி கொடுக்க உறுதி பூண்டிருக்கிறார்.

இந்தோனேசியாவின் பி-டி லயன் மெந்தாரி விமான நிறுவனமும் நாடி என்னும் மலேசிய நிறுவனமும் சேர்ந்து மே மாதத்திலிருந்து கோலாலம்பூரை மையமாகக் கொண்டு இவ்வட்டாரம் முழுக்க பயணச் சேவைகளைத் தொடங்கப்போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தன.ஆக, ஏர் ஏசியாவுக்கு அதன் ஆடுகளத்திலேயே புதிதாக ஒரு சவால் எழுந்துள்ளது.

நீண்ட காலமாக கோலாலம்பூரைத் தளமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஏர் ஏசியா.அண்மையில் பெர்னாண்டஸ் ஜாகார்த்தாவில் வட்டார தலைமையகத்தைத் திறந்ததுடன் இந்தோனேசியாவின் படேவியா விமான நிறுவனத்தையும் யுஎஸ்$80மில்லியனுக்கு வாங்கினார்.

“அவர்கள் இங்கு வருகிறார்கள் என்பதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.இதனால் இந்தோனேசியாவில் அவர்களின் போட்டியிடும் திறன் குறையும்.அதனால் இந்தோனேசியாவில் அவர்களுக்குக் கடும் போட்டியைக் கொடுக்க எங்களால் முடியும்”, என்றவர் கூறியதாக மலேசியாவின் தி எட்ஜ் பினான்சியல் டெய்லி(The Edge Financial Daily) தெரிவித்துள்ளது.

அந்தப் புதிய மேலிண்டோ நிறுவனத்தின் வரவால் ஏர் ஏசியாவின் வருவாய் குறையலாம் என ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள்.

நேற்று ஏர் ஏசியா பங்கு விலை குறைந்தது.கடந்த 11மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்த நிலைக்கு அது சென்றது.

பெர்னாண்டஸ், 2001-இல் நொடித்துப்போன ஏர் ஏசியாவை வாங்கி விரைவிலேயே அதை ஒரு வெற்றிகரமான நிறுவனமாக மாற்றி அமைத்தார்.அது விமானப்பயணத் தொழிலின் மிகப்பெரிய வெற்றிக்கதையாக இன்றளவும் பேசப்படுகிறது.

ஆசியாவில் சிக்கன விமானப் பயணத்துக்கு பேர்பெற்ற நிறுவனமாக ஏர் ஏசியா விளங்குகிறது.பெரிய நகரங்களில் இரண்டாம் நிலை விமான நிலையங்களைப் பயன்படுத்திக்கொண்டு அது பயணச் சேவைகளை மேற்கொண்டு வருகிறது.

பெர்னாண்டஸின் சாதனையை முன்மாதிரியாகக் கொண்டு பல புதிய நிறுவனங்கள் தலையெடுத்து வருவது அதற்குக் கடும் போட்டியாக அமையலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாலிண்டோ நிறுவனம் 12 போயிங் 737ரக விமானங்களுடன் அதன் சேவையைத் தொடங்குகிறது.ஆனால், 2015-க்குள் 100 விமானங்களைக் கொண்டு ஐரோப்பாவுக்கும் சிறகு விரிக்க அது நம்பிக்கை கொண்டிருக்கிறது.

மாலிண்டோ நிறுவனத்தின் பங்காளியான லயன் விமான நிறுவனம் இந்தோனேசியாவின் மிகப் பெரிய தனியார் விமான நிறுவனமாகும்.இன்னொரு பங்காளி, விமானப் பராமரிப்பு,பழுதுபார்க்கும் சேவைகள் செய்துவரும் மலேசியாவின் நேசனல் ஏரோஸ்பேஸ் அண்ட் டிஃபென்ஸ் இண்டஸ்ட்ரிஸ்(நாடி). நாடி அந்தக் கூட்டுத் தொழிலில் 51விழுக்காட்டு பங்குரிமை பெற்றிருக்கும்.

– AFP