அனைத்துலக வாணிக, தொழில் துணை அமைச்சர் முக்ரிஸ் மகாதிர், கார்களை இறக்குமதி செய்வதற்கான அங்கீரிக்கப்பட்ட உரிமங்களை (ஏபி) ஏலம் விடுவதன்வழி கார்களின் விலை குறையும் என்ற பிகேஆரின் கூற்றைக் கிண்டல் செய்தார்.
மாறாக, ஏபி-களை ஏலத்துக்கு விடுவதால் கார் விலை மேலும் உயரும் என்றாரவர். முக்ரிஸ் இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசினார்.
“அது அறிவுக்குப் பொருந்தாத வாதம். ஒரு புறம் கார் விலையைக் குறைக்க வேண்டும் என்கிறீர்கள்.மறுபுறம், ஏபி-களை ஏலத்துக்கு விட்டு அதிக விலை கொடுக்க முன்வருவோருக்கு அதை விற்க வேண்டும் என்கிறீர்கள்.
“இது எப்படி வேலை செய்யும் என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும்.ஏலத்துக்கு விடுவதால் ஒவ்வொரு ஏபி-இன் மதிப்பும் ரிம50,000இலிருந்து ரிம60,000வரை வரை உயரும்.இதில் காரின் விலை சேர்க்கப்படவில்லை”.
இப்போது ஏபிக்கு விதிக்கப்படும் ரிம10,000 கட்டணம் நேரடியாக அரசாங்கக் கருவூலத்துக்குச் செல்வதில்லை என்றும் அது “கார் தொழிலுக்கு உதவும் ஒரு நிதியில்” சேர்ப்பிக்கப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.
முரண்பாடன அறிக்கைகளை வெளியிட்டு பிகேஆர் மக்களைக் குழப்புகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
கார் விலை தொடர்பாக பிகேஆர் இன்றிரவு கோலாலம்பூரில் நடத்தும் கருத்தரங்குக்கு தாம் செல்லப்போவதில்லை என்றும் முக்ரிஸ் தெரிவித்தார்.
“அங்கு செல்ல எந்தக் காரணமும் இல்லை”, என்றார்.
பிகேஆர், சுங்க வரிகளைப் படிப்படியாகக் குறைந்து கார் விலைகளைக் குறைக்கப்போவதாகக் கூறிவருகிறது.
சுங்க வரியை அகற்றுவதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஏபி-களை ஏலம் விடுவதன்வழி ஈடு செய்ய முடியும் என்று அது கூறுகிறது.முடிவில் 2015-இல் ஏபி-கள் வழங்குவதை முற்றாக நிறுத்திவிடவும் அது திட்டமிடுகிறது.