பல முக்கியமான கேள்விகளுக்கு பதில் அளிக்காத நுணுக்கமான புதிய தேசிய கல்வித் திட்டம் 2013-2025, கிட் சியாங்

கடந்த செவ்வாய்க்கிழமை பெரும் ஆரவாரத்துடன் மலேசிய நுணுக்கமான கல்வித் திட்டம் 2013-2025 தொடக்க அறிக்கை வெளியிடப்பட்டது. மக்களின் வரிப்பணத்திலிருந்து பெரும் தொகையைப் பெற்ற வெளிநாட்டு நிபுணர்களால் எழுதப்பட்ட இந்த அறிக்கை பார்ப்பதற்கு விசாலமானதாக இருந்தாலும் பல முக்கியமான கொள்கைகள் குறித்த கேள்விகளுக்கான பதில்களைக் கொண்டிருக்கவில்லை என்று கூறுகிறார் நாடாளுமன்ற மூத்த டிஎபி தலைவர் லிம் கிட் சியாங்.

இக்கேள்விகளுக்குத் தீர்வு காணப்படவில்லை என்றால், இந்த நுணுக்கமான கல்வித் திட்டமும் முன்னாள் பிரதமர்களும் கல்வி அமைச்சர்களும் வெளியிட்ட இதர நுணுக்கமான கல்வித் திட்டங்களுக்கு ஏற்பட்ட கதியைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றாரவர்.

முதலாவதாக, கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுகளிலிருந்து கல்வி அமைச்சு பாடம் கற்றுக்கொண்டதற்கான அறிகுறிகள் ஏதும் இந்த நுணுக்கமான கல்வித் திட்டத்தில் கூறப்படவில்லை.

இந்தப் புதிய நுணுக்கமான கல்வித் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு முன்னெடுப்புகள் மறுசுழற்ச்சி செய்யப்பட்ட கருத்துகளும்   நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளும்தான் என்று கூறிய கிட் சியாங், கல்வி மேம்பாட்டு பெரும் திட்டம் 2006-2010 இல் நடைமுறையிலிருக்கும் கல்வி அமைவில் காணப்படும் குறைபாடுகள் தேவைப்படும் அடிப்படை உள்கட்டமைப்புகளைத் தொடர்ந்து வழங்கும் அடிப்படையில் தீர்க்கப்படும் என்று கூறப்பட்டிருந்ததை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார்.

பல பில்லியன் ரிங்கிட்களைச் செலவிட்ட பின்னரும் இன்னும் பல பள்ளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. “9 ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் 2006 லிருந்து 2010 வரையில் ரிம16 பில்லியன் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக செலவிட்ட பின்னரும் 10,000 பள்ளிகளில் 1,500 பள்ளிகள் (15 விழுக்காடு) இன்னும் குடிப்பதற்கு ஏற்ற தண்ணீர் வசதி இல்லாமல் இருக்கின்றன; 300 பள்ளிகளுக்கு இன்னும் 24 மணி நேர மின்சார வசதியில்லை”, என்று அவர் சுட்டிக் காட்டினார்.

பள்ளிகள் கட்டப்படும், கட்டப்படுகின்றன என்று கூறப்படும் பல கதைகளை இன்றும் நாம் கேட்கிறோம். ஆனால், அவை, குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் கட்டப்படுவதில்லை. “அதே நேரத்தில், பல தரக்குறைவான பள்ளிகள் அவற்றின் உண்மையான செலவிலிருந்து பன்மடங்கு கூட்டப்பட்ட செலவில் அரசியல் அல்லக்கைகளின் நன்மைக்காக கட்டப்பட்டுள்ளன.”

“2005 ஆம் ஆண்டில், 2,768 பள்ளிகளில் கணினி ஆய்வுக்கூடங்கள் இல்லை. 2011 ஆம் ஆண்டில், 2,700 பள்ளிகளில் கணினி ஆய்வுக்கூடங்கள் இல்லை.  2005 ஆம் ஆண்டில், 1664 பள்ளிகளில் இயங்கக்கூடிய அறிவியல் ஆய்வுக்கூடங்கள் இல்லை. 2011 ஆம் ஆண்டில், 2,000 பள்ளிகளில் அதே நிலை. அதாவது, இயங்கக்கூடிய அறிவியல் ஆய்வுக்கூடங்கள் இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கை உண்மையில் 300 க்கு மேல் உயர்ந்துள்ளது; கிட்டத்தட்ட ரிம3 பில்லியன் கணினி மற்றும் அது சம்பந்தப்பட்ட உள்கட்டமைப்புகளுக்கு 9 ஆவது மலேசிய திட்டத்தில் 2006 லிருந்து 2010 வரையில் செலவிட்ட பின்னர் கணினி ஆய்வுக்கூடங்கள் இல்லாதப் பள்ளிகளின் எண்ணிக்கை வெறும் 68 ஆக மட்டுமே குறைந்துள்ளது.

மின்சார வசதியுடைய பள்ளிகள் 8,900 மட்டுமே இருந்த 2005 ஆம் ஆண்டில், ஸ்கூல்நெட் திட்டத்தின் வழி 9,285 பள்ளிகளுக்கு இணைப்பு ஏற்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.

இப்போது இந்தப் புது நுணுக்க கல்வித்  திட்டத்தின் கீழ் அனைத்து 10,000 பள்ளிகளும் 1பெஸ்ட்தாரிநெட் முன்னெடுப்பின் வழி 4G இணையத்தள இணைப்பைப் பெறுமாம் என்பதைச் சுட்டிக் காட்டிய கிட் சியாங், ரிம1.5 பில்லியன் செலவாகும் என மதிப்பட்டுள்ள இச்செயல் திட்டத்தை YTL Communications நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய திட்டத்தை நிருவகிப்பதற்கான தகுதியை இந்நிறுவனம் கொண்டிருக்கவில்லை என்றார்.

விரும்பிய விளைவுகளைக் கொணராத கடந்தகால செலவினங்கள் மீது வெளிப்படையான மற்றும் விரிவான கணக்காய்வுகள் எதனையும் மேற்கொள்ளாமல், இவ்வளவு பெரிய மேம்பாட்டு செலவினங்கள் மீண்டும் அதே மாதிரியான தவறான நிருவாகத்திற்கும் ஊழலுக்கும் இட்டுச் செல்லும் என்று அவர் கூறினார்.

இரண்டாவதாக, இந்தப் புதிய நுணுக்கமான கல்வித் திட்டத்தில் சில கடுமையான, கவனிக்க வேண்டிய கொள்கை புறக்கணிப்புகள் இருக்கின்றன.

“எடுத்துக்காட்டு, தொடக்கப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட கால்பாகத்தைக் கொண்டிருந்த போதிலும் தாய்மொழி மற்றும் சமயப்பள்ளிகளில் கற்பித்தலின் தரம் மற்றும் உள்கட்டமைப்புகள் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான திட்டம் குறித்து எதுவும் இத்திட்டத்தில் கூறப்படவில்லை.

“தாய்மொழி மற்றும் சமயப்பள்ளிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் ஈடுபாடு எதுவும் கூறப்படவில்லை. இப்பள்ளிகளில் அளவுக்கு அதிகமான மாணவர்களைக் கொண்ட வகுப்புகள், சில சமயங்களில் 50க்கும் அதிகமான மாணவர்களைக் கொண்ட வகுப்புகள், குறிப்பாக சுபாங் ஜெயா போன்ற பகுதிகளில், இருப்பது இப்பள்ளிகளின்பால் மக்களுக்குள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது.

“இதனுடன், பால் வகை இடைவெளி அதிகரித்து வருகிறது என்பது கூறப்பட்டிருந்த போதிலும் – சில பல்கலைக்கழகங்களில் மாணவிகளின் எண்ணிக்கை 70 விழுக்காடாக இருக்கிறது என்ற தகவல் உட்பட, இந்தக் கடுமையான,  வளர்ந்து வரும் பிரச்னையைக் கையாள்வதற்கு எவ்விதத் திடமான முன்மொழிதலும் வைக்கப்படவில்லை. எடுத்துக்காட்டு, மாணவிகளைவிட மாணவர்களைக் கவரக்கூடிய மாற்று கற்பித்தல் வழிமுறைகள், குறிப்பாக அதிகமான மாணவர்கள் படிப்பைத் தொடராமல் போய்விடும் பகுதிகளில், குறித்து எதுவும் கூறப்படவில்லை.

“மேலும், சாபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான சிறப்பாகச் செயல்படாத பள்ளிகளையும், மாணவர்களையும், படிப்பைத் தொடராத மிக உயர்ந்த எண்ணிக்கையிலான மாணவர்களையும் கொண்ட மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும், இவ்விரு மாநிலங்களிலும் மாணவர்கள் எதிர்கொண்டுள்ள இந்தத் தனித்தன்மை வாய்ந்த பிரச்னைகளைக் கையாள்வதற்கான திடமானத் திட்டங்கள் எதுவும் இந்த நுணுக்கமான கல்வித் திட்டத்தில் அடையாளம் காணப்படவில்லை.

“சிறப்பாகச் செயல்படும் சாபா மற்றும் சரவாக் பூமிபுத்ரா பூர்வீகக்குடிமக்களை அணுகி அவர்களை ஆசிரியர்களாகவோ, மாற்றத்திற்கான முகவர்களாகவோ அவர்கள் சார்ந்த சமூகத்தினரிடம் செல்ல வைப்பதற்கான இலக்கைக் கொண்ட வியூகம் எதுவும் இந்த நுணுக்கமான கல்வித் திட்டத்தில் கூறப்படவில்லை.

“மூன்றாவதாக, இந்தத் திட்டத்தில் காணப்படும் சில கொள்கைகள் அவற்றின் நோக்கத்திலும் குறியிலக்கிலும் போதுமான பேரார்வம் கொண்டிருக்கவில்லை.

“எடுத்துக்காட்டு, பெடரல் அளவிலான கல்வி அமைச்சின் குறியிலக்கு மற்றும் பொறுப்புகள் போன்றவற்றை மாநில மற்றும் மாவட்ட  அளவிற்கு பகிர்ந்து அளிக்கும் கொள்கை ஊக்கமளிக்கும் நடவடிக்கை என்ற போதிலும், இக்கொள்கை முழுமையானதாக இல்லை. அது மக்கள், குறிப்பாக நகர்புறங்களில், பெரிதும் விரும்பும் ஆங்கிலமொழி போதனையைக் கொண்ட பள்ளிகளைத் தொடங்குவதற்கு அதிகாரமளிக்கவில்லை.

“நான்காவதாக, சில கொள்கைகள் சிறப்பாகச் செயல்படுவதற்கு நன்கு வரையறுக்கப்பட்ட வியூங்கள் அடையாளம் காணப்பட வேண்டும். எடுத்துக்காட்டு, ஆசிரியர் தொழிலுக்கு உயர்தரத்திலுள்ள 30 விழுக்காட்டினரைச் சேர்ப்பது என்ற இலக்கு பாராட்டிற்குரியதாகும். அதனைப் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும்”, என்று கூறும் கிட் சியாங், கல்வி அமைச்சின் சொந்த புள்ளிவிபரங்களின்படி 2009 ஆம் ஆண்டில் இளங்கலை கல்வி பட்டப்படிப்பிற்கு மனு செய்தவர்களில் சிறந்தத் தகுதி பெற்றவர்கள்  ஒரு விழுக்காட்டினர் மட்டுமே. அது 2011 ஆம் ஆண்டின் மொத்த மனுதாரர்களில் 9 விழுக்காடாக சமீபத்தில்தான் உயர்ந்தது என்றாரவர்.

“30 விழுக்காடு இலக்கை அடைவதற்கு சிறந்த தகுதி பெற்றவர்களைக் கவர்வதற்கான வியூகங்கள் தேவைப்படும். Teach for Malaysia (Tfm) என்ற அமைப்பு 50 சிறந்த தகுதி பெற்றவர்களை இரு ஆண்டுகளுக்கு ஆசிரியர்களாகப் பெறுவதில் அடைந்துள்ள அனுபவம் சிறந்த தகுதி உடையவர்களை ஆசிரியர் தொழிலுக்கு ஈர்க்க முடியும் என்பதைக் காட்டுகிறது. ஆனால், இலக்கை அடைவதற்கான வியூகங்கள் அடையாளம் காணப்படவில்லை என்றால், உயர்மட்ட 30 விழுக்காட்டை அடைவது என்பது காணல் நீர்தான்.

மேலும், உயர்தர 30 விழுக்காட்டினரைச் சேர்க்க வேண்டும் என்பதில் தேசியப்பள்ளிகளிலிருக்கும் பூமிபுத்ரா அல்லாதவர்களைச் சேர்ப்பதற்கு தீவிரமான வியூகங்கள் தேவைப்படுகிறது என்பது அங்கீகரிக்கப்படவில்லை என்பதையும் கிட் சியாங் சுட்டிக் காட்டினார்.

“அமைச்சின் சொந்த புள்ளிவிபரங்கள்  தேசியப்பள்ளிகளில் 2001 ஆண்டில் பூமிபுத்ரா ஆசிரியர்கள் விழுக்காடு 78 லிருந்து 2011 ஆம் ஆண்டில் 81 ஆக உயர்வு கண்டதாகக் கூறுகிறது. அதே வேளையில், இந்திய ஆசிரியர்கள் விழுக்காடு 5 தாகவே இருந்தது. ஆனால், சீன ஆசிரியர்களின் விழுக்காடு 17 லிருந்து 14 க்கு குறைந்தது.

30 விழுக்காடு உயர்தரத்தினரைச் சேர்க்க வேண்டும் என்ற இலக்கில் பல தரப்பினரின் பிரதிநிதிகள் சேர்க்கப்பட வேண்டும். சிறப்பாகச் செயல்படும் பூமிபுத்ரா அல்லாதவர்களை ஒதுக்கும் தற்போதைய சூழ்நிலையில், இந்த வரலாற்றுப்பூர்வமான ஒதுக்கும் நிலையிலிருந்து வெளியேறி பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு ஆசிரியர் தொழில் நல்ல வாய்ப்பாக அமைவதற்கான வியூகங்கள் இந்த நுணுக்கமான கல்வித் திட்டத்தில் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது என்றார் கிட் சியாங்.

அரசாங்கப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு சேவைகளில் சேர்வதற்கு ஏதுவாக யுஇசி (Unified Examination Certificate) அங்கீகரிக்கப்படும் முன்மொழிதலை டிஎபி முழுமையாக ஆதரிக்கிறது. இதன் வழி சீன சுயேட்சைப் பள்ளிகளைச் சேர்ந்த மலாய்க்காரர்-அல்லாதவர்கள் அனைத்துப் பாடங்களையும், மாண்டரின் மட்டுமல்ல, போதிக்கக்கூடிய ஆசிரியர் தொழிலுக்கு மனு செய்ய இயலும். ஆனால், இந்த நுணுக்கமான கல்வித் திட்டத்தில் இது முற்றிலும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கவர்ச்சி மிக்க கல்விக்கான வழியாக தொழிற்திறன் மற்றும் தொழில்நுட்ப கல்வியின் மீதான ஈர்ப்பை அதிகரிப்பதற்கான புதிய வியூகங்கள் இந்த நுணுக்கமான கல்வித் திட்டத்தில் விவரிக்கப்படவில்லை என்று கிட் சியாங் கூறுகிறார்.

“தொழிற்திறன் மற்றும் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்துவதற்காக 9 ஆவது மலேசிய திட்டத்தில் ரிம577 மில்லியன் செலவிடப்பட்டிருந்த போதிலும், தொழிற்திறன்  கல்விக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 2008 ஆம் ஆண்டிலிருந்த 62,000 லிருந்து 2011 ஆண்டில் 51,500 ஆகக் குறைந்தது, அதாவது  அந்த வீழ்ச்சி இடைநிலைப்பள்ளி மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 2.7 விழுக்காட்டிலிருந்து 2.2 விழுக்காடு ஆகும்.

“அதே சமயத்தில், தொழில்நுட்ப பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை மிகக்  குறைவே. தற்போதைய எண்ணிக்கை 20,000 அல்லது மொத்த இடைநிலைப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையில் 1 விழுக்காட்டிற்கும் குறைவாகும்.

தொழிற்திறன் மற்றும் தொழில்நுட்ப கல்வியை கவர்ச்சிகரமானதாக்குவதற்கும் அதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் புதிய வியூகங்கள் அடையாளம் காணப்பட வேண்டும். இது மாணவர்கள் பள்ளிப்படிப்பை தொடராமல் விட்டுவிடுவதைக் குறைக்கவும் “பல்கலைக்கழக படிப்பில் ஆர்வமற்ற” மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் இடைநிலைக் கல்வியைத் தொடரவும் வழி பிறக்கும் என்று கிட் சியாங் மேலும் கூறினார்.

“ஐந்தாவதாக, அமைச்சு இந்த நுணுக்கமான கல்வித் திட்டம் குறித்த ஆண்டு அறிக்கைகளை வெளியிடும் என்பதோடு 2015, 2020 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இத்திட்டத்தை விரிவான மறுஆய்வுக்கு உட்படுத்தும் என்று கூறப்பட்டிருப்பதை வரவேற்கும் அதே வேளையில், இந்த ஈடுபாடு எந்த அளவிற்கு கடுமையாக எடுத்துக்கொள்ளப்படும் என்பதில் நமக்கு ஐயப்பாடு இருக்கிறது”, என்று அவர் கூறினார்.

“புள்ளிவிபரங்கள் மற்றும் அரசாங்க உருமாற்றம் திட்டம் (ஜிடிபி) மற்றும் பொருளாதார உருமாற்றம் திட்டம் (இடிபி) ஆகியவற்றின் கீழ் அடைந்த சாதனைகள் எவ்வாறு திரிக்கப்பட்டன என்பதை நாம் அறிவோம்.

குற்றவியல் குறித்த புள்ளிவிபரங்கள் மற்றும் கல்வி அமைவுமுறை குறித்தத் தகவல்களும் எவ்வாறு திரிக்கப்படுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே.

கல்வி அமைச்சு அதன் முன்னேற்றத்தை வெளிப்படையாக அறிவிப்பதில் தீவிரமாக இருக்கிறதென்றால், அது அதன் தகவல்களை முழுமையாகப் பொதுமக்களுக்கு கிடைப்பதற்கு வகைசெய்ய வேண்டும். ஒவ்வொரு தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளியின் யுபிஎஸ்ஆர், பிஎம்ஆர் மற்றும் எஸ்பிஎம் தேர்வுகள் குறித்த விபரங்களும் இந்த பகிரங்க தகவல் அறிவிப்பில் சேர்க்கப்பட வேண்டும். அது இதில் சம்பந்தப்பட்ட பெற்றோர்கள், கல்விமான்கள் இக்கல்வித் திட்டம் அடைந்துள்ள முன்னேற்றத்தைத் தாங்களாகவே மதிப்பீடு செய்ய உதவும் என்றாரவர்.

“இக்குறைபாடுகளைக் கலைவதற்கு அரசாங்கத்திற்கு இன்னும் நேரம் இருக்கிறது. பிரதமரும், கல்வி அமைச்சருமான துணைப் பிரதமரும் கல்வி சீர்திருத்தத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள் என்றால், இக்குறைபாடுகளோடு இதர குறைபாடுகளையும் அகற்ற மக்களோடு கலந்தாலோசிக்கும் கட்டத்தில் முன்வர வேண்டும். இதனை இத்திட்டம் டிசம்பர் மாதத்தில் உறுதி செய்யப்படுவதற்கு முன்பு செய்யப்பட வேண்டும்”, என்று மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான கிட் சியாங் வலியுறுத்தினார்.

TAGS: