வழக்குரைஞர்: ஐஎஸ்ஏ கைதியின் மனைவியை போலீசார் மிரட்டினர்

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட (ஐஎஸ்ஏ)தடுப்புக் கைதி ஒருவரின் மனைவி தம் கணவர் தடுப்புமுகாமில் அடிக்கப்பட்டார் என்று போலீசில் செய்த புகாரின் காரணமாக மிரட்டப்பட்டார் என ஒரு வழக்குரைஞர் கூறினார்.

புக்கிட் அமானைச் சேர்ந்த சில போலீஸ் அதிகாரிகள் தடுப்புக்கைதியின் மனைவியை,இந்தோனேசியரான நுநுர்ஹனியைச் சந்தித்து புகாரைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார்கள்.

இல்லையேல் நுநுர்ஹனியின் விசா ரத்துச் செய்யப்படும் என்று மிரட்டியிருக்கிறார்கள் என்று வழக்குரைஞர் பார்ஹானா அப்துல் ஹாலிம் தெரிவித்தார்.

“புக்கிட் அமான் அதிகாரிகள் பலர் அவரைச் சந்தித்து அவரின் கணவர் பெயர் (விடுதலை செய்யப்படுவோர்) பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகக் கூறினர்.

“அவர் புகார் செய்திருப்பதால் கணவரை விடுவிப்பதில் சிக்கல் உண்டாகலாம்(என்றவர்கள் சொன்னார்கள்)”.நேற்று செய்தியாளர் கூட்டமொன்றில் பார்ஹானா இவ்வாறு கூறினார்.

விசாரணையின்றிக் காவலில் வைக்க இடமளிக்கும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் அண்மையில் ரத்துச் செய்யப்பட்டது என்றாலும், அச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்களில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ள 30பெரில் நுநுர்ஹனியின் கணவர் ரசாலியும் ஒருவராவர்.

சிறுநீரகத்தில் கற்கள்

ரசாலி, கமுந்திங் தடுப்புமுகாமில் உணவைச் சொந்தமாக வாங்கிக் கொள்ள வேண்டியிருப்பதாகவும் பார்ஹானா குறிப்பிட்டார்.

“அவரின் கணவருக்கு சிறுநீரகத்தில் கற்கள் இருக்கின்றன.(முகாமில் கொடுக்கப்படும்) எண்ணெய் கலந்த உணவுப்பொருள்களைச் சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர் சொல்லியிருப்பதால் அவர் சொந்த பணத்தில் உணவை வாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

“அப்படி நடந்திருக்கக்கூடாது. கைதியின் உடல்நலனுக்கு அந்த முகாம்தான் பொறுப்பு”, என்று பார்ஹானா கூறினார்.
நுநுர்ஹனி(இடக் கோடியில்  இருப்பவர்), தம் கணவர் முகாமில் அடிக்கப்பட்ட விவகாரம் பற்றி ஜூலை2-இல் போலீஸ் புகார் ஒன்றைச் செய்தார்.

முகாமில் உண்ணநிலை போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அடிக்கப்பட்டாராம்.

மூன்று நாள் கழித்து மூன்று போலீஸ் அதிகாரிகள் நுநுர்ஹனியை ஜோகூர் பாருவில் அவரது இல்லத்தில் சந்தித்தார்களாம்.

புக்கிட் அமானிலிருந்து வந்ததாக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.

அதனை அடுத்து நுநுர்ஹனி இரண்டாவது முறையாக போலீஸ் புகார் ஒன்றை டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் செய்தார்.அதில் அம்மூன்று அதிகாரிகள் வந்து மிரட்டியதையும் குறிப்பிட்டார்.

“ஜூலை 4-இல் மூன்று அதிகாரிகள் என்னைச் சந்தித்து புக்கிட் அமானிலிருந்து வருவதாகக் கூறினர்”,என்று நுநுர்ஹனி அப்புகாரில் கூறியிருந்தார்.

“அவர்களில் ஒருவர் புவான் பஸ்லின் என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டவர், ஜூலை 2-இல் நான் செய்த புகாரைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு கூறினார்.என் விசா செப்டம்பர் 20-இல் காலவதியாவதைக் கருத்தில் அவ்விசயத்தில் நான் ஒத்துழைக்க வேண்டும் என்றும் மிரட்டினார்”.

புகாரை மீட்டுக்கொள்வது அவருக்கும் அவரின் கணவருக்கும் நல்லது என்றும் கூறப்பட்டதாம்.

ஜூலை2 புகார் தொடர்பில் கமுந்தின் தடுப்புமுகாமிலிருந்து அழைத்தார்கள் என்று நுநுர்ஹனி தெரிவித்தார்.

“புகாரைச் சம்பவம் நடந்த நாளில் செய்யாததாலும் முகாமுக்கு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் செய்யவில்லை என்பதாலும் அது செல்லாது என்று கூறினார்கள்”, என்றவர் குறிப்பிட்டார்.