அங்கீகரிக்கப்பட்ட உரிமங்கள் (ஏபி) பற்றி அனைத்துல, வாணிக,தொழில் துணை அமைச்சர் முக்ரிஸ் மகாதிர் தெரிவித்துள்ள கருத்து அவர் கார் சந்தை செயல்படும் விதத்தை அறியாமல் பேசுகிறார் என்பதைக் காண்பிக்கிறது என்கிறது பக்காத்தான் ரக்யாட்.
முக்ரிஸ் கூறுவதற்கு மாறாக, ஏபி-களைப் பொதுவில் ஏலத்துக்கு விடுவதால் கார் விலை பாதிப்புறாது என்று பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறினார்.
அதன்வழி கிடைக்கும் வருமானம் அரசாங்கக் கருவூலத்துக்குச் செல்லும்.இப்போது நடப்பதுபோல் அந்த ஏபிகளை விற்கும் அனைத்துலக வாணிக,தொழில் அமைச்சின்(மிட்டி)) ‘நல்ல நண்பர்களுக்கு’ச் செல்லாது.
“அவர் ஏபி உரிமம் பற்றியும் பொதுச் சந்தை செயல்படும் விதத்தையும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது”, என்று பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி(இடம்) கூறினார்.
அவ்விருவரும், ஏலத்துக்கு விடுவதால் இப்போது ரிம10,000ஆக உள்ள ஒவ்வொரு ஏபி-இன் மதிப்பும் ரிம50,000 இலிருந்து ரிம60,000வரை வரை உயரும் என்றும் இந்த விலை உயர்வைப் பயனீட்டாளர்கள்தான் ஏற்க வேண்டிவரும் என்றும் முக்ரிஸ் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கை மீது கருத்துரைத்தபோது இவ்வாறு கூறினர்.
சுங்க வரிகளைப் படிப்படியாக அகற்றுவதன்வழி கார் விலையைக் குறைக்கப்போவதாக பிகேஆர் கூறி வருகிறது.
ஏபிகளைத் தற்காலிகமாக ஏலத்துக்கு விடுவதும் 2015-இல் அதை முற்றாக ஒழிப்பதும் அதன் திட்டமாகும்.
அவ்விருவரும் கார் விலைக் குறைப்புமீது பக்காத்தான் ரக்யாட் நேற்றிரவு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார்கள். அக்கருத்தரங்குக்கு சுமார் 150பேர் வந்தனர்.அதன்மீதான விவாதம் hashtag #turunkanhargakereta டிவிட்டர் தளத்திலும் தொடர்ந்தது. நேற்று நடந்தது முதலாவது கருத்தரங்கம்தான். அதுபோல் நாடு முழுக்க கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
நேற்றைய கருத்தரங்கில் புவா, ஒரு எம்பி என்ற முறையில் தமக்குக் கிடைத்த ஏபியைக் கொண்டு பிரிட்டனிலிருந்து நிஸ்ஸான் ஜுயுக் கார் ஒன்றை இறக்குமதி செய்த அனுபவத்தை விவரித்தார்.
கப்பல் கட்டணம், வரி எல்லாம் சேர்த்து காருக்கான செலவு ரிம125,500 என்றும் ஆனால் அக்கார் மலேசியாவில் ரிம175,000-க்கு விற்கப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.
இதிலிருந்து தம் ஏபி-இன் மதிப்பு ரிம50,000 என்பது புலனாகிறது என்றாரவர்.
“ஏபிக்குரிய பணம் எங்கே போகிறது?ஏபியை யார் இலவசமாக அல்லது குறைந்த விலையில் பெறுகிறார்களோ அவர்களுக்குத்தான் அப்பணம் செல்கிறது.(இப்போது இக்கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது).அதாவது சலுகை பெறுவோருக்கு அப்பணம் போய்ச் சேர்கிறது….
“ஏபிகளை ஏலத்துக்கு விட்டாலும், உண்மையிலேயே கார் இறக்குமதி செய்வோர் அவற்றை வாங்கத்தான் போகிறார்கள், உரிய விலையைக் கொடுக்கத்தான் போகிறார்கள்.
“ஆனால், அந்த ரிம50,000 ஏபியை இலவசமாகப் பெற்றுவந்த இடைத்தரகருக்குப் போகாமல் அரசாங்கத்துக்குக் கிடைக்கிறது”, என்று புவா கூறினார்.