பிகேஆர் பேருந்துமீது மீண்டும் சிகப்புச் சாயம் வீசியடிக்கப்பட்டது

பிகேஆரின் இரட்டை மாடி பிரச்சாரப் பேருந்துமீது மூன்றாம் முறையாக சிகப்புச் சாயம் வீசியடிக்கப்பட்டிருக்கிறது.இன்று பிற்பகல் கட்சியின் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் ஜோகூரில் பயணம் மேற்கொண்டிருந்தபோது அச்சம்பவம் நிகழ்ந்தது.

ஜோகூர், தங்காக்கில் ஒரு பள்ளிவாசலுக்கு வெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தபோது அப்பேருந்து தாக்குதலுக்கு இலக்கானதாக ஜோகூர் பிகேஆர் தலைவர் சுவா ஜுய் மெங் தெரிவித்தார்.

தங்காக் பிகேஆர் நடவடிக்கை அறையைத் திறந்து வைத்து உரையாற்றிய சுவா, தாக்குதல் நிகழ்ந்தபோது அன்வார் பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்ததாகக் கூறினார்.

ஆகஸ்ட் 31, பிகேஆரின் நாடுதழுவிய பயணத்தின் முதல் நாளில் கோத்தா பாருவில் அப்பேருந்துமீது முதன்முதலாக சிகப்புச் சாயம் வீசியடிக்கப்பட்டு அதன் கண்ணாடியும் அடித்து நொறுக்கப்பட்டது.

ஒரு வாரம் கழித்து செப்டம்பர் 8-இல் மலாக்கா, ஜாசினில் பேருந்து மீண்டும்  சிகப்புச் சாயத் தாக்குதலுக்கு இலக்கானது.

இன்று காலை பினாங்கின் டிஏபி தலைமையகம் மற்றும் அதன் சேவை மையத்தின்மீதும் இதேபொன்ற தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தனியே மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவரின் செய்கை

தங்காக் பிகேஆர் நடவடிக்கை அறையில் மலேசியாகினி பிகேஆரின் தலைமைச் செயலாளர் சைபுடின் அப்துல்லாவைச் சந்தித்தபோது அவர், அன்வாரும் மற்ற பிகேஆர் தலைவர்களும் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது அச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவித்தார்.

“பள்ளிவாசலிலிருந்து வெளியில் வந்தபோது, பேருந்துமீது சாயத்தைப் பார்த்தோம்.போலீசார் படம் பிடித்துக்கொண்டும் ஆராய்ந்து கொண்டும் இருந்தனர்.

“மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு இளைஞர் சாயத்தை வீசி எறிந்ததாகக் கூறினார்கள்.

“அந்த இளைஞரை விரட்டிச் சென்ற போலீசார் மோட்டார் சைக்கிள் எண்ணைக் குறித்துக்கொண்டார்கள்.ஆனால், அது போலியானது என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது”, என்று சைபுடின் தெரிவித்தார்.

தங்காக் பிகேஆர் தலைவர்கள் அதன் தொடர்பில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று கூறிய அவர் பிகேஆர் பரிவாரம் அதன் ஜோகூர் பயணத்தைத் தொடரும் என்றார்.