மே 13 சம்பவத்தில் லிம் கிட் சியாங் சம்பந்தப்படவில்லை என்பதை சாட்சி உறுதிப்படுத்துகிறார்

டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், 1969ம் ஆண்டு மே 13 கலவரங்களின் போது சிலாங்கூர் மந்திரி புசார் வீட்டில் இருந்த கொடிக் கம்பத்தில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுவதை 64 வயதான அகமட் ஹபிப் என்பவர் மறுத்துள்ளார்.

Tanda Putera முகநூல் பக்கத்தில் சேர்க்கப்பட்டிருந்த அந்தத் தகவல் தமக்குத்  தெரிந்த வரை உண்மையில்லை என அவர் சொன்னார்.

அவர் அந்த சமயத்தில் மந்திரி புசார் வீட்டு வளாகத்தில் இருந்தார். அந்தச் சம்பவத்தின் போது  நான் மந்திரி புசார் வீட்டைச் சுற்றிலும் சீனர்கள் யாரையும் பார்க்கவில்லை என தமது அனுபவத்திலிருந்து சொல்வதாகவும் அகமட் ஹபிப் குறிப்பிட்டார்.

“அந்த நேரத்தில் (மே 13 சம்பவத்தின் போது) மந்திரி புசார் இல்லத்தில் கூடுமாறு போலீசார் எங்களைக் கேட்டுக் கொண்டனர்.”

“அந்த சம்பவத்தின் போது மந்திரி புசார் வீட்டைச் சுற்றிலும் ஒரு சீனர் கூட இல்லை,” என அகமட் இன்று டிஏபி ஏற்பாடு செய்த நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.

1969ம் ஆண்டு இனக் கலவரம் நிகழ்ந்த போது தாம் மாரா தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவராக இருந்ததாக பினாங்கைச் சேர்ந்த அகமட் சொன்னார்.

மந்திரி புசார் அலுவலகத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் லிம் சிறுநீர் கழித்ததாக கூறிக் கொள்ளும் குறிப்புக்களுடன் இயக்குநர் சுஹாய்மி பாபா-வின் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் முகநூல் பக்கத்தில் லிம்-மின் படம் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து சர்ச்சை மூண்டது.

Tanda Putera-வில் சேர்க்கப்படவிருக்கும் “உண்மையில் நடைபெற்ற” காட்சிகளில் அதுவும் ஒன்று என அந்த முகநூல் பதிவில் குறிப்ப்டப்பட்டிருந்தது.

சர்ச்சை மூண்ட பின்னர் அந்தப் பதிவு அகற்றப்பட்டு விட்டது.

‘லிம் உயிருடன் இருக்க மாட்டார்’

அந்த நேரத்தில் மந்திரி புசார் வீட்டுக்கு அருகில் லிம் இருந்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்க முடியாது என்றும் அகமட் சொன்னார்.

காரணம் அந்த இடத்தில் காவல் வலுவாக இருந்தது. அதனால் கொடிக் கம்பத்தில் சிறுநீர் கழிப்பது முடியாத காரியமாகும் என அவர் குறிப்பிட்டார்.

“அந்தக் கொடிக் கம்பம் மந்திரி புசார் வீட்டு வளாகத்துக்குள் இருந்தது. அதனை பாதுகாப்பு ஊழியர்களும் போலீசாரும் காவல் புரிந்தனர்.”

“அந்தக் கொடிக் கம்பத்தின் மீது லிம் சிறுநீர் கழித்திருந்தால் அவர் நிச்சயம் பிடிபட்டிருக்கக் கூடும் அல்லது இங்கு இருக்கவும் முடியாது,” என அகமட் தொடர்ந்து கூறினார்.

அகமட் சொத்துப் பரிவர்த்தனைத் தொழில் செய்து வருகிறார். கூறப்படும் அந்தச் சம்பவத்துக்கு பின்னணியில் உள்ள உண்மையை விளக்குவதற்கு தாம் சுயமாகவே முன் வந்ததாக அவர் சொன்னார்.

“நான் இதற்கு முன்னர் லிம் கிட் சியாங்கை சந்தித்தது இல்லை. எனக்கு அவரைத் தெரியாது. நேற்றுதான் அவரை முதன் முறையாக சந்தித்தேன்.”

“மலேசியாகினி செய்தியை வாசித்த பின்னர், நான் அந்த இடத்தில் இருந்ததால் (சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படும்) உண்மை நிலவரத்தை எடுத்துச் சொல்வதற்காக லிம்-உடன் தொடர்பு கொள்ளுமாறு நான் என் வழக்குரைஞரைக் கேட்டுக் கொண்டேன்,” என்றார் அவர்.

 

TAGS: