‘Innocence of Muslim’ என்னும் தலைப்பைக் கொண்ட ‘இஸ்லாமிய எதிர்ப்பு’ திரைப்படத்தை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கண்டித்துள்ளார்.
அது ‘முஸ்லிம் உணர்வுகளைக் காயப்படுத்தி குழப்பத்தைத் தூண்டும்’ நோக்கத்தைக் கொண்ட திட்டம் என அவர் வருணித்தார்.
அதற்குப் பொறுப்பான தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அமெரிக்க அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.
“வெறுப்பை ஊட்டும்” அந்தத் திரைப்படம் மீட்டுக் கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் அது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பேச்சுரிமையை ‘தவறாகப் பயன்படுத்தியுள்ளது’ என்றார் அவர்.
“புனிதத் தன்மையைச் சீர்குலைப்பது, நிந்திப்பது ஆகியவற்றுக்கும் பேச்சு சுதந்திரம், அல்லது படைப்புக்களுகான அனுமதி ஆகியவற்றுக்கும் இடையில் ஒரு கோடு வரையப்பட வேண்டும்,” என்றும் அன்வார் வலியுறுத்தினார்.
அந்தத் திரைப்படம் முஸ்லிம்களை மட்டும் காயப்படுத்தவில்லை. எல்லா சமயங்களையும் புண்படுத்தியுள்ளது. வன்முறைக்கு ஒரு காரணமாக அதனைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
அதற்குப் பதில் தவறான புரிந்துணர்வுகளைப் போக்குவதற்கு சமயங்களுக்கு இடையில் கலந்துரையாடல்களும் தொடர்புகளும் ஏற்பட வேண்டும் என்றும் அன்வார் கேட்டுக் கொண்டார்.
‘திரைப்படத் தயாரிப்பாளரின் வலைக்குள் விழ வேண்டாம்’
அந்தத் திரைப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக கூறப்பட்ட சம்பவங்களின் போது லிபியாவில் அமெரிக்க அரசதந்திரிகள் கொல்லப்பட்டதை “பகுத்தறிவு இல்லாதது” எனக் கண்டித்த அன்வார், வன்செயல்களில் ஈடுபடுவதின் மூலம் திரைப்படத் தயாரிப்பாளர்களின் வலைக்குள் விழ வேண்டாம் என முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறினார்.
“அந்த திரைப்படத்துக்குப் பின்னணியில் உள்ளவர்கள் சமயங்களுக்கும் மக்களுக்கும் இடையில் பகைமையையும் வேற்றுமையையும் விதைக்க முயலுகின்றனர் என்பது தெளிவாகும்,” என்றார் அவர்.
அந்தத் திரைப்படத்தை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கும் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் அபு பாக்காரும் கண்டித்துள்ளனர்.
“வேண்டுமென்றே ஆத்திரத்தை” மூட்டியுள்ள அந்தத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் அமெரிக்க அரசாங்கத்தை வற்புறுத்தினர்.
இஸ்ரேலிய திரைப்படத் தயாரிப்பாளரான Sam Bacile தயாரித்துள்ளதாக கூறப்படும் ‘Innocence of Muslims’ திரைப்படத்தில் முகமது நபியை தவறாகச் சித்தரிக்கும் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
ஆனால் Bacile அந்தத் திரைப்படத்தைப் ‘பயன்படுத்திக் கொண்டு விட்டதாகவும்’ அந்தத் திரைப்படத்தின் நோக்கம் குறித்து தாங்கள் ‘முழுக்க முழுக்கத் தவறாக வழி நடத்தப்பட்டு விட்டதாகவும்’ அந்தப் படத்தில் நடித்தவர்களும் வேலை செய்தவர்களும் கூறியுள்ளனர்.
“வசனங்கள் கடுமையாக மாற்றப்பட்டு சம்பந்தப்பட்ட அனைவரிடமும் பொய்கள் கூறப்பட்டுள்ளது எங்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. நிகழ்ந்துள்ள துயரச் சம்பவங்களுக்காக நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம்,” என அவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.