அஸ்மினுடைய உதவியாளர் சபாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை

பிகேஆர் உதவித் தலைவர் அஸ்மின் அலியின் உதவியாளர் ஹில்மன் இட்ஹாம் சபாவுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

இந்த வார இறுதியில் சபாவில் நடைபெறவிருக்கும் பக்காத்தான் ராக்யாட் மலேசியா தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக கோத்தா கினாபாலு விமான நிலையத்தை நேற்றிரவு அவர் சென்றடைந்தார்.

அப்போது தம்மை 10 குடி நுழைவுத் துறை அதிகாரிகள் எதிர்கொண்டதாக அவர் சொன்னார்.

“தாம் சபாவுக்குள் நுழையக் கூடாது என்பதை அறிவிக்கும் கடிதம் ஒன்றை அவர்கள் என்னிடம் கொடுத்தனர். அந்தக் கடிதத்தில் சபா குடி நுழைவுத் துறை துணை உதவி இயக்குநர் பென்னி பியோனா ஜே ஜெப்லின் கையெழுத்திட்டிருந்தார்.”

“1959/63ம் ஆண்டுக்கான குடிநுழைவுச் சட்டத்தின் 56(1)(ஏ) பிரிவின் கீழ் சபா முதலமைச்சரிடமிருந்து ஆணையைப் பெற்ற பின்னர் அந்தக் கடிதம் வெளியிடப்பட்டது,” என்றார் அவர்.

நேற்று பிற்பகல் மணி 3.15 வாக்கில் 14 பேர் கொண்ட அஸ்மின் குழு கோலாலம்பூரிலிருந்து கோத்தா கினாபாலு விமான நிலையம் சென்றடைந்தது.

ஹில்மன் மட்டும் பிற்பகல் மணி 3.30க்கு தடுத்து வைக்கப்பட்டார். அஸ்மின் உட்பட மற்ற அனைவரும் சபாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட வேளையில் ஹில்மன் மட்டும் கோலாலம்பூருக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

காரணம் தெரியவில்லை

சபாவுக்கு ஏற்கனவே தாம் சென்றுள்ளதால் இந்த முறை ஏன் தடுக்கப்பட்டேன் என்பது என்பது தமக்குத் தெரியவில்லை என்றும் ஹில்மன் சொன்னார்.

“கடைசியாக நான் இரண்டு மாதங்களுக்கு முன்பு சபாவுக்குச் சென்றேன். நான் ஏற்கனவே அங்கு மூன்று முதல் நான்கு முறை வரை சென்றுள்ளேன். எனக்கு எந்தப் பிரச்னையும் இருந்தது இல்லை.”

“ஆனால் நேற்று எல்லா மாநில குடி நுழைவு அதிகாரிகளும் தயாராக இருந்தனர். நான் வந்து சேருவதற்காக காத்திருந்ததைப் போலத் தெரிகிறது.”

இன்று லாபுவானிலும் நாளை கோத்தா கினாபாலுவிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பக்காத்தான் ராக்யாட் மலேசிய தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள பிகேஆர் குழு அங்கு சென்றுள்ளது.

 

TAGS: