உங்கள் கருத்து: மிஸ்மாகேட்: அவருக்கு எப்படி சில மாதங்களில் பிஆர் கிடைத்தது ?

 “1982 ஆம் ஆண்டு தொழிலாளியாக மிஸ்மா இந்த நாட்டுக்கு வந்தார். அதே ஆண்டு அவருக்கு பிஆர் என்ற நிரந்தர வசிப்பிட உரிமை கிடைத்தது. குடிநுழைவுத் துறை இது குறித்து சற்று விளக்க வேண்டும்.”

 

 

 

மிஸ்மா: அவர்கள் என்னைப் பற்றி ஏன் அப்படிச் சொல்கிறார்கள்

லின்: இந்தோனிசியாவைச் சேர்ந்த உடலுழைப்புத் தொழிலாளி ஒருவர் பிஆர் தகுதியும் அடுத்து குடியுரிமையும் எப்படிக் கிடைத்தன என்பதை யாராவது விளக்குவார்களா?

எனக்குத் தெரிந்த ஆஸ்திரேலியப் பிரஜை ஒருவர் மலேசியரை மணந்து கொண்டிருக்கிறார். அவர் இங்கு கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு இன்னும் குடியுரிமை மறுக்கப்படுகிறது.

நாம் இங்கு இருப்பதை மட்டும் சுரண்டிக் கொண்டிருக்கவில்லை. முன்னுரிமை கொடுக்க வேண்டிய விஷயங்களில் கூட நாம் குறுகிய மனப்போக்கைக் கொண்டிருக்கிறோம். நமது நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கு சிறிதளவு கூட உதவாதவர்களுக்கு நாம் குடியுரிமையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் அந்த இந்தோனிசியர்கள் பூமிபுத்ராக்களாக  நடத்தப்படுகின்றனர்.

அதே வேளையில் என் குடும்பம் நான்காவது தலைமுறை மலேசியர்களாகும். என் கணவர் குடும்பம் 10ம் தலைமுறையைச் சேர்ந்தது. ஆனால் நாங்கள் இரண்டாம் தர குடி மக்கள். நாங்கள் ஏன் விரக்தி அடைந்துள்ளோம் என்பதற்குக் காரணம் தெரிகிறதா?

மஞ்சள் குத்துச் சண்டைக்காரன்: மலேசியர்களை திருமணம் புரிந்துள்ள தொழில் நிபுணத்துவம் பெற்ற  ஆண்கள்/பெண்களைக் காட்டிலும்(கணவர்/மனைவியருடன் இந்த நாட்டுக்குப் புலம் பெயர்ந்தவர்கள்)  இந்தோனிசியத் துப்புரவுத் தொழிலாளிக்கு குடியுரிமை மிக எளிதாகக் கிடைப்பதுதான் வினோதமாகும்.

இந்த நாட்டில் அதிக தேர்ச்சி பெற்ற தொழில் நிபுணர்களைக் காட்டிலும் தொழில் தேர்ச்சி ஏதுமில்லாத தொழிலாளர்கள் வரவேற்கப்படுவதாகத் தோன்றுகிறது. ஏன்? தேர்ச்சி பெறாத தொழிலாளியை தேர்தல்களில் பிஎன்னுக்கு வாக்களிக்குமாறு செய்ய முடியும். ஆனால் தொழில் நிபுணர்களோ குடியுரிமை கிடைத்த பின்னர் யாருக்கு வாக்களிப்பது என்பதை சொந்தமாக முடிவு செய்வார்கள்.

சிந்திக்கக் கூடிய மக்களைக் காட்டிலும் எளிதில் வாங்கப்படக் கூடிய மக்களையே நாம் நாடுகிறோம்.

தே தாரேக்: 1982ம் ஆண்டு தொழிலாளியாக மிஸ்மா இந்த நாட்டுக்கு வந்தார். அதே ஆண்டு  அவருக்கு பிஆர் என்ற நிரந்தர வசிப்பிட உரிமை கிடைத்தது. 1980களிலும் 1990களிலும் மலேசியக் குடி மக்களுடைய ஆயிரக்கணக்கான அந்நிய மனைவியர் நிரந்தர வசிப்பிடத் தகுதியைப் பெறுவதற்கு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

பாகுபாடான அந்தக் கொள்கை மீது குடிநுழைவுத்துறை விளக்கமளிக்க வேண்டும். மலேசியாவுக்கான முன்னாள் தேசிய பாட்மிண்டன் பயிற்றுநரான சீனக் குடிமகனான ஹான் ஜியாங்கிற்கு குடியுரிமை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஆனால் மிஸ்மா போன்ற சாதாரண உடலுழைப்புத் தொழிலாளிக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் கடை ஒன்றுக்கு அருகில் உள்ள ஐந்தடியில் செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவரை நான் ஒரு முறை சந்தித்தேன். சிவப்பு அடையாளக் கார்டைத் தாம் எந்தச் சிரமமும் இல்லாமல் பெற்று விட்டதாகவும் அடுத்த சில ஆண்டுகளில் பிரஜாவுரிமையைப் பெற்று விட்டதாகவும் அவர் சொன்னார். இதில் இந்த நாட்டுக்கு மதிப்புக் கூட்டப்பட்ட அம்சம் என்ன?

கேகன்: இந்த நாட்டில் அடையாளப் பத்திரங்கள் காணாமல் போய் விட்டதால் பத்தாயிரக்கணக்கான சீனர்களும் இந்தியர்களும் நாடற்றவர்களாக இருக்கின்றனர். அவர்கள் மிஸ்மாவைக் காட்டிலும் இந்த நாட்டில் அதிக காலம் வாழ்ந்துள்ளனர். அவர்கள் மலேசியர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அவர்கள் உள்ளூர் மொழியைப் பேசுகின்றனர். உள்ளூர் பள்ளிக்கூடங்களில் கல்வி பயின்றுள்ளனர். அவர்களுக்கு இங்கு குடும்பமும் உறவினர்களும் கூட உள்ளனர்.

அவர்களை மலேசியர்கள் என்று அங்கீகரிக்க மறுப்பதின் மூலம் தேசியப் பதிவுத் துறை அவர்களுடைய வாழ்க்கையை சிரமமாக்கியுள்ளது. முஸ்லிம் அல்லாத உண்மையான மலேசியர்களைக் காட்டிலும் இந்தோனிசியத் தொழிலாளர்களுக்கு எப்படி மிக எளிதாக பிஆரும் குடியுரிமையும் கிடைத்தன?

தகுதி உடையவன்: மில்லியன் கணக்கான மிஸ்மாக்கள் வெளியில் இருக்கின்றனர். ஆகவே இதில்  வியப்பு ஒன்றுமில்லை.