ஹுடுட் விவகாரத்தில் அம்னோ போடும் வேடத்தை அன்வார் சாடியிருக்கிறார். முஸ்லிம் அல்லாத மக்கள் கூடியிருக்கும் போது அந்த விஷயத்தை அம்னோ தாழ்வாகப் பேசுகின்றது. அதே நேரத்தில் பக்காத்தானை “சமயத் துரோகிகள்” என்றும் “முஸ்லிம் அல்லாதாருடன் ஒத்துழக்கிறது” என்றும் அது தாக்கிப் பேசுவதாக அனவார் குறிப்பிட்டார்.
“அரசியல் ஆதாயத்துக்காக ஹுடுட் விஷயத்தை பெரிதுபடுத்தும் அம்னோ- பாரிசான் நேசனல் கபட நாடகத்தை நாங்கள் கண்டிக்கிறோம்.”
“அந்த விவகாரத்தை தனது ஊடகங்களில் தொடர்ந்து பெரிதுபடுத்துவதின் மூலம் இன, சமயப் பதற்ற நிலையை ஏற்படுத்த அம்னோ முயற்சி செய்வது மேலும் வருத்தத்தைத் தருகிறது.”
முஸ்லிம் அல்லாதவர்களிடம் அவர்கள் ஷாரியாவை எதிர்ப்பதாகக் காட்டுகின்றனர். சில வேளைகளில் அது பழங்காலத்திய முறை என்றும் கூறுகின்றனர். அதே வேளையில் அவர்கள் பக்காத்தான் முஸ்லிம் தலைவர்கள், முஸ்லிம் அல்லாத தலைவர்களுடன் ஒத்துழைப்பதின் மூலம் தங்கள் சமயத்துக்கும் இனத்துக்கும் துரோகம் செய்கின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
“பக்காத்தான் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தவும் ” வரும் பொதுத் தேர்தலில் ஆளும் கூட்டணியின் வாய்ப்புக்களைப் பெருக்கக் பக்காத்தானுக்குள் உட்பூசலை உருவாக்க அம்னோ அரும்பாடுபட்டு வருகிறது என்றார் அன்வார்.
பக்காத்தான் “இணக்கப் போக்கு, பரஸ்பரம் நம்பிக்கை,மரியாதை ஆகிய கோட்பாடுகள்” அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும்.
மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்புடைய தீர்வு காணும் நோக்கத்துடன் “நாகரிகமான முறையில் மனம் விட்டு” விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அன்வார் கருதுகிறார்.
“குறிப்பிடத்தக்க பிரச்னைகள் மீது கூட்டணியின் ஒவ்வொரு உறுப்புக் கட்சியும் தனது நிலையை விளக்குவதற்கு உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் பக்காத்தான் கருதுகிறது.”
முஸ்லிம் என்ற முறையில் தாம் தனிப்பட்ட முறையில் திருக்குர் ஆன் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவன் என்றும் அதே வேளையில் “மலேசிய சமூக அடிப்படையில் நாம் அனைவரும் கூட்டரசு அரசியலமைப்புக்குக் கட்டுப்பட்டுள்ளோம் என்றும் அன்வார் சொன்னார்.
“ஒருவர் தமது சமயத்தை பின்பற்றும் உரிமை கூட்டரசு அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை சுதந்திரமாகும்.”
“அந்த வகையில் எல்லா சூழ்நிலைகளிலும் ஷாரியா நீதிபரிபாலனத்திலிருந்து முஸ்லிம் அல்லாதாருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அது தொடரவும் வேண்டும்.”
புக்கு ஜிங்கா என்ற ஆரஞ்சுப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள பக்காத்தான் ராக்யாட் நிலைக்கு ஏற்ப அந்தக் கருத்து அமைந்துள்ளது,” என்றும் எதிர்த்தரப்புத் தலைவர் குறிப்பிட்டார்.