கெடா மந்திரி புசாரை நீக்கும் சதித் திட்டம் ஏதுமில்லை என்கிறார் பாஹ்ரோல்ராஸி (Phahrolrazi)

கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக் ஒராண்டுக்கு முன்னரே மாற்றப்பட்டிருக்க வேண்டும் என தாம் சொன்னதாகக் கூறும் அனாமதேய அறிக்கையை தாம் வெளியிடவில்லை என அந்த மாநில ஆட்சிமன்ற உறுப்பினரான பாஹ்ரோல்ராஸி ஸாவாவி மறுத்துள்ளார்.

அஜிஸானுடனான தகராறு ஏற்கனவே முடிந்து விட்டது என பாஹ்ரோல்ராஸி கூறியதாக இன்று சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

“நானும் மாநில பாஸ் துணை ஆணையாளர் இஸ்மாயில் சாலே-யும் கெடா அரசாங்கத்தில் ஆட்சி மன்ற உறுப்பினர்களாக எங்கள் பதவிக் காலம் நீட்டிக்கப்படுவதற்கு நாங்கள் ஒப்புக் கொண்ட பின்னர் அந்தப் பிரச்னை தீர்ந்து விட்டது. அஜிஸான் தலைமைத்துவத்திற்கு நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம் என்பதே அதன் அர்த்தமாகும்.”

“கடந்த மே மாதம் நிகழ்ந்த ஆட்சி மன்ற நெருக்கடிக்குப் பின்னர் கெடா பாஸ் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த சில தரப்புக்கள் விரும்புவதாகவே நான் கருதுகிறேன்,” பாஹ்ரோல்ராஸி சொன்னதாக சினார் ஹரியான் தெரிவித்தது.

உடல் நலம் குன்றியிருப்பதால் அஜிஸான் ஏற்கனவே மாற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கும் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலியும் அஜிஸானை ஆதரிக்கின்றனர் என்றும் பிரீ மலேசியா டுடெ செய்தி இணையத் தளம் அடையாளம் கூறாத கெடா பாஸ் தலைவர் ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருந்தது.

அஜிஸான் தொடர்ந்து மந்திரி புசாராக இருக்க வேண்டுமா என சினார் ஹரியான் பாஹ்ரோல்ராஸி-யிடம்  வினவியது. அதற்குப் பதில் அளித்த அவர், அது பாஸ் மத்திய தலைமைத்துவத்தைப் பொறுத்தது என்றார்.

கடந்த ஏப்ரல் மாதம் அஜிஸான் தலைமைத்துவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்களாக மீண்டும் நியமனம் பெறுவதை பாஹ்ரோல்ராஸியும் இஸ்மாயிலும் நிராகரித்த பின்னர் நெருக்கடி மூண்டது.

ஆனால் பாஸ் மத்திய தலைமைத்துவம் நடுவர் பணியாற்றித் தகராற்றைத் தீர்த்து வைத்த பின்னர் அவர்கள் மீண்டும் மாநில அரசாங்கத்தில் இணைந்தனர். அஜிஸான் நிர்வாகத்தை மேற்பார்வையிடுவதற்கு ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.

அண்மைய காலமாக அஜிஸானுக்கு பல உடல் நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. தமது சொந்த நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கூட அவர் காணப்படவில்லை.