மசீச உதவித் தலைவர்மீது சுவா சொய் லெக் பாய்ச்சல்

மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்,  தம் கட்சியைச் சேர்ந்த துணை அமைச்சர் ஒருவர், கோப்பெங் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராவதற்கு பிஎன் உறுப்புக்கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்ட்டிருக்கிறார் என்று கடிந்து கொண்டிருக்கிறார்.

நேற்று ஈப்போவில் செய்தியாளர்களிடம் பேசிய சுவா, துணை அமைச்சரைப் பற்றிப் பல புகார்களைப் பெற்றிருப்பதாகக் கூறினார்.அவர் “பண அரசியலில்” ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினர்.

துணை அமைச்சரின் பெயரை சுவா வெளியிடவில்லை ஆனால், அவர் ஒரு பெண் என்று மட்டும் சொன்னார். மசீசவில் ஒரே ஒரு பெண் துணை அமைச்சர்தான் இருக்கிறார். அவர் ஹெங் சியாய் கை.

ஹெங், மசீச மகளிர் உதவித் தலைவரும் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சருமாவார்.அவர் இதற்குமுன் தேர்தலில் போட்டியிட்டதில்லை..செனட்டராக நியமிக்கப்பட்டு துணை அமைச்சராக இருக்கிறார்.

கட்சித் தேர்தலில் ஹெங், சுவாவின் எதிரியான ஒங் தி கியாட் அணியில் இருந்தார். என்றாலும், சுவா அவரைத் துணை அமைச்சராக நியமனம் செய்தார்.

கோப்பெங் 2008வரை  மசீச கோட்டையாக திகழ்ந்த ஒரு தொகுதி. 2008-இல் அங்கு போட்டியிட்ட முன்னாள் மசீச தலைவர் டாக்டர் லிங் லியோங் சிக்கின் மகன் லிங் ஹீ லியோங், பிகேஆரின் டாக்டர் லீ பூன் சை-இடம் தோல்வி அடைந்தார்.

ஹெங்:அது நானல்ல

சின் சியு டெய்லி, ஹெங்கின் தொடர்புகொண்டபோது சுவா தம்மைக் குறிப்பிட்டுப் பேசியதாகக் கருதவில்லை என்றார்.

மசீசவில் பல துணை அமைச்சர்கள் உள்ளனர் என்றும் “பண அரசியல்”குற்றச்சாட்டு தமக்குப் பொருந்தாது என்றும் கூறினார்.

“பண அரசியல் என்னுடைய பாணி அல்ல.எல்லோராலும் அதில் ஈடுபட இயலாது”, என்றவர் கூறியதாக தெரிகிறது.

சம்பந்தப்பட்ட துணை அமைச்சர் கட்சி நலனைவிட சொந்த நலனுக்கு முன்னுரிமை கொடுப்பதாக சுவா குற்றம் சுமத்தினார். “தன்னைவிட கட்சியைத்தான் அவர் அதிகம் நேசிக்க வேண்டும்”, என்றார்.