மலேசியக் கூட்டரசில் ஒளிமயமான எதிர்காலத்தை கனவு கண்ட சரவாக் மக்கள் இப்போது பயங்கரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். 18 அம்ச மலேசியா ஒப்பந்தத்தில் கூறப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என சரவாக் பிகேஆர் தலைவர் பாரு பியான் கூறியிருக்கிறார்.
அவர் நேற்று கூச்சிங் சொங்லின் பூங்காவில் மலேசியா தொடக்க விழாவில் பெருந்திரளான மக்களிடையே பேசினார்.
“49 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளன்று நான்கு நாடுகள்-அதாவது சரவாக், வட போர்னியோ ஆகியவற்றுடன் சிங்கப்பூரும் மலாயாவும் இணைந்து மலேசியக் கூட்டரசை தோற்றுவித்தன,” என்று அவர் தமது உரையைத் தொடக்கினார்.
“பரஸ்பரம் பாதுகாப்பு, வளர்ச்சி, வளப்பம் ஆகியவற்றுக்கு இணைந்து பாடுபடும் நான்கு நாடுகளின் உண்மையான பங்காளித்துவம் என்னும் உறுதியான நம்பிக்கையில் கூட்டரசு உதயமானது.”
“எங்கள் மூதாதையர்கள் அந்த நாளை பெரிய பெரிய கனவுகளுடனும் அவாக்களுடனும் வரவேற்றனர்.”
“எண்ணெய், வெட்டுமரம், தங்கம், வளமான நிலம், கடினமாக உழைக்கும் ஒற்றுமையான மக்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்த சபாவும் சரவாக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருந்தன,” என்றார் பாரு பியான்.
பல இனங்களையும் வம்சாவளியையும் சேர்ந்த மகிழ்ச்சியான ஆரோக்கியமான, பாதுகாப்பான மக்கள் நிறைந்த கூட்டரசாக எதிர்காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 49 ஆண்டுகளுக்குப் பின்னர் நாம் நம்மையே கேட்டுக் கொள்கிறோம்:
நமது நாட்டில் கிடைக்கும் பெரும் செல்வத்தின் மூலம் ஒவ்வொரு குடிமகனும் பயனடைந்துள்ளாரா ? மின்சாரம், தூய்மையான நீர், பொருத்தமான சுகாதாரக் கவனிப்பு ஆகியவை போன்ற நவீன கால அடிப்படை வசதிகள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கிறதா ?
“நமது மண்ணும் பாரம்பரியமும் எதிர்காலத் தலைமுறையினருக்காக பாதுகாக்கப்பட்டுள்ளதா ? நமது பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வி வாய்ப்புக்கள் கிடைக்கின்றனவா ? சரவாக், சபா தொழிலாளர்கள் உயர்ந்த தேர்ச்சிகளைப் பெற்று அர்த்தமுள்ள வேலைகளைப் பெற்றுள்ளனரா ?
ஏன் பலர் புகார் செய்கின்றனர் ?
மலேசியாவைத் தோற்றுவித்த தலைவர்கள் கண்ட கனவுகள் நிறைவேற்றப்பட்டனவா என்ற கேள்வியும் மற்ற பல கேள்விகளில் அடங்கும் என பாரு பியான் சொன்னார்.
அல்லது அந்தக் கனவுகள் அனைத்தும் ‘இந்த அற்புதமான நிலத்தை” தங்கள் இல்லம் எனக் கூறிக் கொண்ட கணக்கிலடங்காத மக்களுக்கு பயங்கரமாக மாறிவிட்டன என பாகெலாலான் சட்டமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.
ஏன் இப்போது பலர் அடிக்கடி ‘barang naik, barang naik’ எனப் புகார் செய்கின்றனர் ? வாழ்க்கைச் செலவுகளையே சமாளிக்க முடியாமல் அவர்கள் தடுமாறுகின்றனர்.
“நமது நிலத்துக்கும் காடுகளுக்கும் மரங்களுக்கும் இயற்கை வளங்களுக்கும் என்ன நேர்ந்தது ?” “நமது சுற்றுச்சூழல் அழைந்த பின்னர் எல்லா மரங்களும் வெட்டப்பட்ட பின்னர், எல்லா ஆறுகளும் மாசுபட்ட பின்னர், எல்லா மீன்களும் மடிந்த பின்னர் பணத்தை சாப்பிட முடியாது என்பதை உணருவோம்,” என்ற இந்தியப் பழமொழியை அவர் மேற்கோள் காட்டினார்.
சரவாக் மக்களுடைய மூதாதையர்கள் கண்ட கனவுகளை இரவு நேரத்தில் வந்த ஈவிரக்கமற்ற பேராசை பிடித்த வேடதாரிகள் நசுக்கி விட்டனர் என்றும் பாரு பியான் சொன்னார்.
“ஆனால் சரவாக் மக்களாகிய நாம் ஆற்றல் மிக்கவர்கள். நம்மிடமிருந்து திருடியவர்கள் ஏற்படுத்திய பயங்கரக் கனவுகளை நாம் முறியடிப்போம். நமக்காக நமது முன்னோர்கள் கண்ட கனவுகளுக்குப் புத்துயிர் கொடுக்க நாம் முனைந்துள்ளோம்.”
கூச்சிங் பிரகடனம் பற்றிக் குறிப்பிட்ட பாரு பியான், நமது மூதாதையர்கள் கையெழுத்திட்ட மலேசியா ஒப்பந்தத்தை நிறைவேற்ற பக்காத்தான் ராக்யாட் தலைவர்கள் முழு மனதுடன் ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொன்னார். அந்த ஒப்பந்தத்தை கூட்டரசு அரசாங்கம் புறக்கணித்து வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“நமது கனவுகள் நனவாவதற்கு உதவி செய்வதற்கு தாங்கள் கடப்பாடு கொண்டுள்ளதைக் காட்டுவதற்காக பக்காத்தான் தலைவர்கள் இங்கு வந்துள்ளனர்.”
“இன்று கூச்சிங் பிரகடன உணர்வு தூண்டி விடப்பட்டுள்ளது. அது தொடர்ந்து நமது இதயங்களில் பிரகாசமாக எரியும். நல்ல நாட்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதற்கான வாக்குறுதியையும் நம்பிக்கையையும் அது தருகின்றது.”