அரசுசாரா அமைப்புகள் (NGOs) பலவற்றின் உறுப்பினர்கள் சுமார் 25பேர், ‘சுவாராமுக்கு ஆதரவு’இயக்கம் ஒன்றைத் தொடங்கும் வகையில் இன்று காலை மலேசிய நிறுவனங்களின் ஆணையத்தின் கோலாலும்பூர் அலுவக வளாகத்தில் ஒன்றுதிரண்டனர்.
சுவாராம்மீது இப்போது விசாரணை நடந்து வருகிறது. அது எப்படிப்பட்ட அமைப்பு, அதற்கு எங்கிருந்து நிதி கிடைக்கிறது என்பன போன்றவற்றை ஆறு அரசுத்துறைகளின் அதிகாரிகளைக் கொண்ட ஒரு பணிக்குழு ஆராய்ந்து வருகிறது.
இந்நிலையில் சுவாராமுக்கு ஆதரவு திரட்டும் நோக்கத்தில் இவ்வியக்கம் தொடக்கப்பட்டிருப்பதாக சுதந்திரத்துக்கான வழக்குரைஞர் அமைப்பைச் சேர்ந்த ஃபாடியா பிக்ரி (இடம்) செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
“பிரான்சில ஸ்கோர்பியன் நீர்மூழ்கிமீது நடக்கும் விசாரணைகளின் காரணமாக(சுவாராமை)தண்டிக்க வேண்டுமென்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதுபோல் தெரிகிறது”.
அந்த ஒற்றுமை இயக்கத்துக்கு 138உள்நாட்டு என்ஜிஓ-களும் 56வட்டார அமைப்புகளும் பக்கபலமாக உள்ளன என்று ஃபாடியா கூறினார்.