சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் அனுமதி கொடுத்ததும் இந்த வாரம் நீதிமன்றத்தில் மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என உள்நாட்டு வாணிக, கூட்டுறவு பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் அறிவித்துள்ளார்.
மேல் நடவடிக்கைக்காக சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்துக்கு சமர்பிக்கப்பட்ட, சிசிஎம் என்ற மலேசிய நிறுவன ஆணையம் நடத்திய விசாரணை அடிப்படையில் அந்தக் குற்றச்சாட்டு அமைஇந்திருக்கும் என இஸ்மாயில் சொன்னதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.
என்றாலும் அவர் அந்த அரசு சாரா அமைப்பு புரிந்துள்ள குற்றங்களை வெளியிடவில்லை.
சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்துக்கு சமர்பிக்கப்பட்ட வேண்டியிருப்பதால் சுவாராமுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு கால தாமதம் ஏற்பட்டது என இஸ்மாயில் விளக்கினார்.
“இதில் பொது நலனும் சம்பந்தப்பட்டுள்ளது. காரணம் சுவாராம் பதிவு செய்யப்பட்ட அமைப்பு அல்ல. மாறாக சட்டப்பூர்வ அமைப்பு போன்று செயல்பட்டு வந்துள்ளது.”
“மேலும் அது முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகக் கருதப்படுவதால் சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்தின் கவனமும் தேவைப்பட்டது,” என அவர் கோலாலம்பூரில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் கூறினார்.
அதே குற்றத்துக்காக மற்ற நிறுவனங்கள் மீதும் குற்றம் சாட்டப்படுமா என இஸ்மாயிலிடம் வினவப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ஒரு நிறுவனம் அல்லது அமைப்புக்கு எதிராக புகார் செய்யப்பட்டாலோ அல்லது சந்தேகம் எழுந்தாலோ மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சொன்னார்.
ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் சிசிஎம்-ல் பதிந்து கொண்டுள்ளன. அவை சோதனைக்காக ஆண்டறிக்கைகளை அனுப்புகின்றன என அவர் விளக்கினார்.
“அதனால் ஒவ்வொரு குற்றத்தையும் சிசிஎம் சோதிப்பது மிகவும் கடினமாகும். எனவே திடீர் சோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்படும்,” என அவர் மேலும் விளக்கினார்.