‘பண அரசியலில்’ ஈடுபடுவதாகச் சொல்லக்கேட்டு அதிர்ச்சியடைந்தார் மசீசவின் ஹெங்

மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், கட்சியின் “பெண் துணை அமைச்சர் ஒருவர்” கோப்பெங் வேட்பாளராக நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதற்காக பண அரசியலில் ஈடுபட்டிருக்கிறார் என்று கூறியிருப்பதைக் கேட்டு அதிர்ச்சி அடைவதாக அக்கட்சியின் மகளிர் உதவித் தலைவர்  ஹெங் சியய் கை கூறினார்.

ஹெங்தான் மசீசவின் ஒரே பெண் துணை அமைச்சர்.அவர் அடிக்கடி கோப்பெங் செல்லும் வழக்கமுள்ளவர்.கோப்பெங் தொகுதி மேம்பாட்டுக்கென்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவு செய்யப்பட்டும் வருகிறது. இவையெல்லாம் சேர்ந்து அப்படியொரு குற்றச்சாட்டு உருவாக காரணமாக இருந்திருக்கலாம் என்றாரவர்.

“நான் ஒரு துணை அமைச்சர்தான்.அத்தொகுதியின் ‘வளர்ப்புத் தாய்’ போல் இருந்து என் கடமையைச் செய்து வருகிறேன்”, என்றவர் கூறியதாக ஓரியெண்டல் டெய்லி நியுஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

“நான் ‘தத்தெடுத்துக் கொண்டிருக்கும்’அத்தொகுதிக்கு உதவி தேவைப்பட்டால் நான் அங்கு சென்று பிரச்னையைத் தீர்த்து பண உதவியும் செய்கிறேன். பிஎன், மக்களின் நம்பிக்கையைப் பெறவும் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிபெறவும்தான் இதையெல்லாம் செய்கிறேன்”.

மகளிர்,குடும்ப, சமூக மேம்பாட்டு துணை அமைச்சரான ஹெங், மசீசாதான் தற்போது மாற்றரசுக்கட்சி வசமுள்ள பாகான் செராய், கிள்ளான், கோப்பெங் ஆகிய மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பைத் தமக்கு வழங்கியதாகக் குறிப்பிட்டார்.

கடந்த கட்சித் தேர்தலில் ஹெங், முன்னாள் கட்சித் தலைவர் ஒங் தி கியாட் அணியில் இருந்தார்.அந்த அணியில் இருந்த பலரும் சுவா தரப்பினரால் தோற்கடிக்கப்பட்டனர். என்றாலும் சுவா, ஹெங்கை துணை அமைச்சராக நியமனம் செய்தார்.

ஞாயிற்றுக்கிழமை அக்குற்றச்சாட்டை வெளியிட்ட சுவா, துணை அமைச்சர் யார் என்பதைச் சொல்லவில்லை ஆனால், அவர் ஒரு பெண் என்றவர் குறிப்பிட்டார். .மசீசவில் உள்ள ஒரே பெண் துணை அமைச்சர்  ஹெங் மட்டுமே.

நேற்று, ஈப்போவில் அக்குற்றச்சாட்டை மறுத்த ஹெங், எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தமக்கு இல்லை என்றார்.

தேர்தல் காலத்தில் இப்படிப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வெளியிடப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றும் அவர் சொன்னார்.

தம்மீது புகார் சொன்னவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்று சுவாவை ஹெங் கேட்டுக்கொண்டார்.செய்தியாளர்களும் அவரிடம் அவ்வாறே அவரைக் கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.