பினாங்கு, பிஎன் நில விற்பனைகள் மீது வெள்ளை அறிக்கையை வெளியிடும்

பினாங்கு மாநில அரசாங்கம் முன்னாள் பாரிசான் நேசனல் நிர்வாகம் நிலத்தை மலிவாக விற்றதாக கூறப்படுவது தொடர்பில் வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட முடிவு செய்துள்ளது.

நடப்பு அரசாங்கம் அரசு நிலத்தை விற்பதாகவும் அந்தப் பரிவர்த்தனைகளில் சுய நலன்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் பிஎன் திரும்பத் திரும்ப குற்றம் சாட்டுவதை முறியடிக்க பக்காத்தான் ராக்யாட் எடுத்துள்ள புதிய நடவடிக்கை அதுவாகும்.

மொத்தம் 4,000 ஏக்கர் பரப்புள்ள நிலம் விற்கபட்டதை அம்பலப்படுத்த செப்டம்பர் 12ம் தேதி மாநில ஆட்சிமன்றக் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டதாக முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

ஊராட்சி மன்ற, போக்குவரத்து நிர்வாகத்துக்கான ஆட்சி மன்ற உறுப்பினர் தலைமையிலான சிறப்புக் குழு நடத்தும் விசாரணை அடிப்படையில் அந்த வெள்ளை அறிக்கை அமைந்திருக்கும் என்றும் அவர் சொன்னார்.

மலிவான நில விற்பனைகள் மீதான ஆய்வில் திறந்த டெண்டர் இல்லாமல் நிலம் மலிவாக விற்கப்பட்டது, விற்கப்பட்ட விலை, யாருக்கு அவை விற்கப்பட்டன என்பதை அடையாளம் காண்பது அந்த ஆய்வுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளாகும்.”

“வெள்ளை அறிக்கை, விற்பனை நடைமுறைகளையும் விற்கப்பட்ட நோக்கத்துக்கு நிலம் பயன்படுத்தப்பட்டதா என்பதை ஆய்வு செய்யும்.”

“அத்துடன் பலவீனங்களையும் மலிவாக விற்கப்பட்டதால் மாநில அரசுக்கு ஏற்பட்ட நிதி இழப்புக்களையும் வெள்ளை அறிக்கை பட்டியலிடும். அது போன்ற தவறான நடைமுறைகள் மீண்டும் நிகழாதிருப்பதற்கான நடவடிக்கைகளையும் அது பரிந்துரை செய்யும்,” என்றும் லிம் வலியுறுத்தினார்.