1950ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட ஆதாரச் சட்டம் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் முன்னர் அரசு தரப்பு விரிவான புலனாய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதாக சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் கூறுகிறார்.
வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் ஒரு நபருடைய பெயர் இணைக்கப்பட்டுள்ளதால் அவர் மீது எளிதாகக் குற்றம் சாட்டி விட முடியாது என்றார் அவர்.
முதலாவதாக அந்தக் கட்டுரை புண்படுத்தும் தன்மையைக் கொண்டது என்பதை மெய்பிக்க வேண்டும். இரண்டாவதாக சம்பந்தப்பட்ட நபர் அதனை வெளியிட்டுள்ளாரா அல்லது எழுதியுள்ளாரா என்பதை நிரூபிக்க வேண்டும்.
“ஏனெனில் யாருடைய பெயரும் பயன்படுத்தப்பட முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். மலேசியாவில் பல அப்துல் கனி-கள் இருக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் அந்தப் பெயரைப் பயன்படுத்தலாம்.”
“நாங்கள் எளிதாக ஒரு நபர் மீது குற்றம் சாட்ட முடியாது. உண்மைகளைக் கண்டறிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இல்லை என்றால் நாங்கள் பொறுப்பற்றவர்கள் ஆவோம்.”
“உங்களிடம் கணினி இருந்தால் அது உங்கள் கணினியிலிருந்து சேர்க்கப்பட்டதாக நான் நிரூபிக்க வேண்டும். உங்களுக்கு இணைய வசதிகள் இருப்பதை நான் மெய்பிக்க வேண்டும். இல்லையென்றால் நான் என் வழக்கை நிரூபிக்க முடியாது,” என அப்துல் கனி புத்ராஜெயாவில் நிருபர்களிடம் கூறினார்.
ஆதாரச் சட்டத்தின் 114ஏ பிரிவு விதிகள் குறித்த விளக்கக் கூட்டத்துக்குப் பின்னர் அவர் நிருபர்களைச் சந்தித்தார்.
அந்தத் திருத்தம் பெரும் சர்ச்சையை குறிப்பாக இணைய மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
மலேசிய மனித உரிமை ஆணையம், வழக்குரைஞர்கள் மன்றம் போன்ற எல்லாத் தரப்புக்களிடமிருந்தும் அந்தத் திருத்தங்கள் மீது கருத்துக்களைப் பெற்ற பின்னர் தமது அலுவலகம் தேவையான பரிந்துரைகளைச் செய்யும் என்றும் அப்துல் கனி சொன்னார்.
பெர்னாமா