சிட்னியில் லைனாஸ் தலைமையகத்தில் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பர்

சமூக ஆர்வலர்கள் குவாந்தான், கெபெங்கில் லைனாஸ் ஆலை செயல்படுவதற்குத் தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க , சிட்னியில் லைனாஸ் கார்ப்பரேசன் தலைமையகம் முன் ஒரு கண்டனக் கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

அக்கண்டனக் கூட்டம் மலேசிய நேரப்படி காலை 10.30க்கு(சிட்னி நேரம் பிற்பகல் மணி 12.30) நடத்தப்படும் என ஆஸ்திரேலியாவின் புவி நண்பர்கள் அமைப்பு கூறியது.

ஆஸ்திரேலியாவின் மவுண்ட் வெல்ட்-இலிருந்து கதிரியக்கத் தன்மை வாய்ந்த மண்ணை குவாந்தான் ஆலைக்கு ஏற்றுமதி செய்யும் லைனாஸ் திட்டத்தைக் கண்டிக்கவே அக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அந்த அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரான டல்லி மெக்கிண்டயர், பிட் ஸ்திரிட்டில் அந்த நிறுவனத்துக்கு வெளியில் தெரிவித்தார்.

அந்நிறுவனம் விருப்பமில்லாத ஓர் இடத்துக்கு வலுக்கட்டாயமாக அத்திட்டத்தைக் கொண்டுசெல்லக்கூடாது என்றாரவர்.

“மலேசியாவில் லைனாஸுக்கு எதிராக மலேசிய வரலாற்றில்  இதுவரை நடைபெற்றிராத அளவுக்கு மிகப் பெரிய சுற்றுச்சூழல் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. லைனாஸ் நச்சுத்தன்மை மிக்க பொருளை ஏற்றுமதி செய்வதைத் தடுப்பதில் ஆஸ்திரேலிய சமூக ஆர்வலர்களும் மலேசியர்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்”, என்றாரவர்.

கடந்த வாரம், அந்நிறுவனத்துக்குத் தற்காலிக உரிமம்(டிஓஎல்) வழங்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றபோது அதில் மேற்கு ஆஸ்திரேலியாவின் பசுமை சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருவரும் கலந்துகொண்டனர்.

லைன் மெக்லேரன், ரோபின் சேப்பல் ஆகிய அவ்விருவரும், அவ்விவகாரத்தில் ஆஸ்திரேலிய அரசாங்கம் “பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை” எனச் சாடினர்.