ROS சுவாராமிடம் சொல்கிறது: எங்கள் அதிகாரிகளை நுழைய அனுமதிக்காதது குற்றமாகும்

நேற்று ROS என்ற சங்கப் பதிவதிகாரி அலுவலக அதிகாரிகள் சுவாராம் அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குற்றமாகும்.”

இவ்வாறு ROS இயக்குநர்  அப்துல் ரஹ்மான் ஒஸ்மான் கூறுகிறார்.

சுவாராமை விசாரிக்கும் அதிகாரத்தை ஆர்ஒஎஸ் பெற்றுள்ளது என்றும் சுவாராம் தன்னை ஒரு சங்கமாக பதிவு செய்து கொள்ளவில்லை என்றும் அதற்கு முயற்சி செய்யவில்லை என்றும் அவர் சொன்னார்.

அப்துல் ரஹ்மான் உத்துசான் மலேசியாவிடம் அந்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.

“பதிவு செய்யப்படாத அந்த அமைப்புக்கு எதிரான விசாரணைக்கு உதவும் பொருட்டு சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்வது உட்பட சோதனையை மேற்கொள்வதற்காக நான்கு ROS அதிகாரிகளும் இரண்டு போலீஸ்காரர்களும் சுவாராம் அலுவலகத்துக்குச் சென்றனர்.”

“ஆனால் ROS குழு சுவாராம் ஒத்துழைக்க மறுத்து தூண்டி விடும் முயற்சிகளில் ஈடுபட்டதால் அரை மணி நேரத்துக்குப் பின்னர் அங்கிருந்து புறப்பட்டது.”

“அரசாங்க அதிகாரிகளை தடுக்கும் நடவடிக்கைகள் தவறானதாகும். அதற்காக நடவடிக்கை எடுக்க முடியும்,” என அப்துல் ரஹ்மான் சொன்னதாக அம்னோவுக்குச் சொந்தமான அந்த ஏடு தெரிவித்தது.

‘சுவாராம் தொழில் ரீதியாக இயங்க வேண்டும்’

சாத்தியமான இடையூறுகள் இருந்த போதிலும் விசாரணையைத் தொடரப் போவதாக அவர் சூளுரைத்தார்.

‘சுவாராம் தொழில் ரீதியாக இயங்க வேண்டும். இந்த பிரச்னையில் அது இடம் கொடுத்து திறந்த போக்கைப் பின்பற்ற வேண்டும். விசாரணைகளைத் தடுப்பது பொது மக்களுடைய சந்தேகத்தையே அதிகரிக்கும்.”

“விசாரணை இப்போது தான் தொடங்கியுள்ளது. அது தொடரும்,” என்றும் அப்துல் ரஹ்மான் சொன்னார்.

“ஒர் அமைப்பை சோதனை செய்வதற்கான அறிக்கை” என்னும் தலைப்பைக் கொண்ட பாரத்தை வழங்குவதற்காகவே ROS அதிகாரிகள் அங்கு வந்ததாக சுவாராம் கூறியது.

இதர பல விஷயங்களுடன் அந்த அரசு சாரா அமைப்பின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அந்தப் பாரம் கோருகின்றது.

ஆனால் சிசிஎம் என்ற மலேசிய நிறுவன ஆணையத்தின் கீழ் அது ஒரு நிறுவனம் என்பதே சுவாராம் நிலையாகும். ஆகவே அது ROS-ன் கீழ் வரவில்லை.

 

TAGS: