இஸ்லாத்தை அவமானப்படுத்திய அமெரிக்கத் திரைப்படம் தொடர்பில் முஸ்லிம்கள் காட்டி வரும் சீற்றம் பற்றிய தமது டிவிட்டர் செய்தியை பேராக் டிஏபி தலைவர் இங்கே கூ ஹாம் மீட்டுக் கொண்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.
“என்னுடைய டிவிட்டர் செய்தியை மீட்டுக் கொண்டு அதனால் மனம் புண்பட்டிருக்கக் கூடிய எந்த முஸ்லிமிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்,” என அவர் இன்று விடுத்த அறிக்கை கூறியது.
“Sam Bacileக்கு எதிராக முஸ்லிம்கள் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும் என கைரி விரும்புகிறார். அது இஸ்லாத்துக்கா அல்லது அவருடைய அரசியல் ஆதாயத்துக்கா ? முஸ்லிம்கள் அதன் மீது மிக அதிகமான நேரத்தையும் சக்தியையும் வீணாக்கிக் கொண்டிருக்கின்றனரா ?”என செப்டம்பர் 17ம் தேதி இங்கே டிவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதனை அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் கடுமையாகக் குறை கூறியிருந்தார். கைரி நாளை அந்தத் திரைப்படத்தை கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறார்.
அந்த சர்ச்சையில் அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவும் சேர்ந்து கொண்டது. கெடா பாஸ் ஆணையாளரும் மந்திரி புசாருமான அஜிஸான் அப்துல் ரசாக், ஜோகூர் பாஸ் ஆணையாளர் மாஹ்போட்ஸ் முகமட், முன்னாள் பினாங்கு பாஸ் இளைஞர் தலைவர் ஹபிஸ் முகமட் நோர்டின் ஆகியோர் இங்கே-யைக் கண்டிக்கும் செய்தியை அது வெளியிட்டது.
தாம் கேள்வியை மட்டுமே எழுப்பியதால் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற பிரச்னையே எழவில்லை என இங்கே நேற்று பெரித்தா ஹரியானிடம் கூறினார்.
இதனிடையே அந்தத் திரைப்படத்தைக் கண்டிப்பதே டிஏபி கட்சியின் அதிகாரத்துவ நிலை என அதன் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறியிருக்கிறார். ஆனால் அவர் இங்கே-யை குறை கூறவில்லை. அந்தத் திரைப்படத்தை தாம் கண்டிப்பதை முக்கிய நாளேடுகள் வெளியிடும் வரையில் அவர் மீது தாம் எந்தக் கருத்தும் சொல்லப் போவதில்லை என்றும் லிம் அறிவித்தார்.
செப்டம்பர் 16ம் தேதி லிம்-மின் பத்திரிக்கை அறிக்கையில் விளக்கப்பட்டுள்ள தமது கட்சியின் கருத்துக்களை தாம் பகிர்ந்து கொள்வதாகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான சுதந்திரத்தை ஆதரிப்பதாகவும் தமது அறிக்கையில் இங்கே கூறியுள்ளார்.