‘ஜோடிக்கப்பட்ட படம் மீது ராயிஸ், ஹிஷாம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’

தனது படங்களில் ஒன்று திருத்தப்பட்டு ஜோடிக்கப்பட்டதை பெர்னாமா ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து உள்துறை, பண்பாட்டு அமைச்சர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஜோகூர் பிகேஆர் கூறுகிறது.

ஏனெனில் அந்த தேசிய செய்தி நிறுவனம் அரசாங்கத்துக்குச் சொந்தமானதாகும்.

“அது பாரிசான் நேசனல் (பிஎன்) அரசாங்கத்தின் தேசிய செய்தி நிறுவனம் ஆகும். அதனால் ஊடக விவகாரங்களுக்கு பொறுப்பான உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன், தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் ஆகியோர் அந்த தேசிய வெட்கக் கேட்டுக்காக மலேசியர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்,” என ஜோகூர் பிகேஆர் தலைவர் சுவா ஜுய் மெங் கூறினார்.

அந்த ‘நெறியற்ற’ சம்பவத்தை பெர்னாமா ஒப்புக் கொண்டது மட்டும் போதாது என சுவா விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“பாகாங் பெக்கானில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் படங்களில் ஒன்று, பெரும் கூட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் திருத்தப்பட்டு ஜோடிக்கப்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளது மட்டும் போதாது.”

“அதற்கான பலி ஆட்டைத் தேடுவதும் கண்டிக்கப்பட வேண்டும். ஏனெனில் அது மலேசியாவுக்கு மேலும் அவமானத்தைக் கொண்டு வரும்,” என்றார் அவர்.

அந்தப் படம் திருத்தப்பட்டதற்கு படப்பிடிப்பாளரே காரணம் என்றும் அது அரசாங்கத்துக்குச் சொந்தமான செய்தி நிறுவனத்தை ‘கீழறுப்பு’ செய்யும் முயற்சியாக இருக்கலாம் என்றும்  பெர்னாமா அளித்துள்ள விளக்கம் மீதும் சுவா சந்தேகம் தெரிவித்தார். http://www.malaysiakini.com/news/209459

“கண்களை மூடிக் கொண்டு எப்போதும் ஆதரவு அளிக்கும் விசுவாசமான பிஎன் ஆதரவாளர்களைத் தவிர ஒரு சிலரே படங்களைத் திருத்துவது அந்தத் தேசிய செய்தி நிறுவனத்தை தனி நபர் ஒருவர் கீழறுப்புச் செய்யும் நடவடிக்கை என பெர்னாமா சொல்வதை நம்புவர்.”

“பெர்னாமா காலம் தாழ்த்தி தனது படங்கள் திருத்தப்பட்டுள்ளன என்பதை ஒப்புக் கொண்டுள்ளதும் அதன் உண்மை நிலை குறித்து சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.”