சைபுடின்: மலேசியாவுக்குத் தேவை ‘புது அரசியல்’

மலேசியாவுக்கு “புது அரசியல் தேவை”. அதன்வழிதான் “மலேசியா சிறப்புற முடியும்” என்கிறார் உயர்கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா. 

ஒரு புதிய அரசியல் அணுகுமுறை, “ஆரோக்கியமான, தூய்மையான, பக்குவப்பட்ட, முற்போக்கான ஜனநாயக முறை”யைக் காண்பதற்கான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கும் என்றாரவர்.

நேற்று மெல்பர்ன் பல்க்லைக்கழகத்தில் மெல்பர்ன் அம்னோ மன்றம் ஏற்பாடு செய்திருந்த மனிதவள மூலதன மேம்பாடு மீதான கருத்தரங்கில் சைபுடின் பேசினார்.அந்நிகழ்வில் கல்வியாளர்கள், மெல்பர்ன் நகரில் உள்ள மலேசிய தூதரக தலைமைப் பொறுப்பதிகாரி டாக்டர் முகம்மட் ரமீஸ் யாஹ்யா ஆகியோருடன் 200க்கு மேற்பட்ட மாணவர்களும் கலந்துகொண்டனர்.

புது அரசியல் நான்கு பகுதிகளைக் கொண்டது என்றாரவர்.

அதை அடைய முதலாவதாக அரசியல் நேர்மை தேவை என்றாரவர்.

“அரசியல் என்பது இலட்சியவாதத்தையும் செயல்முனைப்பையும் அறிவார்ந்த செயல்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர தனிப்பட்ட/சுய நலன்களை அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது”, என்று சைபுடின் குறிப்பிட்டார்.

“அறிவார்ந்த அரசியலை, விவேகமான அரசியலை,சேவைநோக்கம் கொண்ட அரசியலை நாம் அறிமுகப்படுத்த வேண்டும்”.

இரண்டாவது பகுதி நிர்வாகம் சம்பந்தப்பட்டது.

“இதில், அடிநிலையிலிருந்து புத்ரா ஜெயாவரை மூன்று துறைகள் அரசு, வணிகம், சிவில் சமுதாயம் ஆகியவை எல்லாவற்றிலும் சேர்ந்தே முடிவெடுக்கும்”.

மூன்றாவது “ஜனநாயக புத்தாக்கம்”.

“முடிவெடுக்கும் பணிகளில் மக்களின் பங்கேற்பை அதிகரிக்க புதுப்புது தளங்களையும் வழிமுறைகளையும் உருவாக்க வேண்டும்..

“வாக்களிக்கும் வயதை 18க்குக் குறைத்தல், வாக்காளர் பதிவை இயல்பாக்குதல், ஊராட்சி மன்றங்களிலும் மேலவை(செனட்)யிலும் மாற்றங்கள் செய்தல் முதலியவையும் இதில் அடங்கும்”.

நான்காவதாக, முற்போக்கான அரசியல் சிந்தனை.

“ஆழமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

“இறைநம்பிக்கை, நல்லறிவு, கலாச்சாரம், நாகரிகம், பொருளாதார வளர்ச்சி, சமுதாய அரவணைப்பு, நிலையான மேம்பாடு முதலிவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க மேம்பட்ட கருத்துகளும் திட்டங்களும் தேவை”, என்றாரவர்.

இளைஞர்கள் வாழ்க்கையின் எல்லாக் கூறுகளிலும் மாற்றங்களை விரும்புவார்கள்.ஆனால், மாற்றங்களைக் காலநேரம் பார்த்து செய்ய வேண்டும் என்றாரவர்.

சைபுடினின் பேச்சும், கேள்வி நேரத்தில் அவர் அளித்த விளக்கங்களும் அந்த இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்துவிட்டன. அவர்களில் ஒருவர் சைபுடின் பிரதமராக முயல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். அதற்கு சைபுடின், “அவ்வளவு பேராசை எனக்கில்லை”, என்றார். 

அந்நிகழ்வில் பேசிய பெர்லிஸ் முப்தி டாக்டர் ஜுவாண்டா ஜெயா, மாணவர்கள் வெளிநாட்டில் இருந்தாலும் அவர்கள் முஸ்லிம்-அல்லாத மாணவர்களுடன் பழகுவதற்கோ அவர்களின் பண்டிகைகளில் கலந்துகொள்ளவோ தயங்க வேண்டியதில்லை என்றார்.

மற்ற சமயத்தவரின் பண்டிகைகளில் கிறிஸ்மஸ், தீபாவளி, சீனப்புத்தாண்டு போன்றவற்றில் அவர்கள் தாராளமாக கலந்துகொள்ளலாம். ஆனால், ஹலாலான விசயங்களை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.