குதப்புணர்ச்சி வழக்கு ஆகஸ்ட் 22-க்குத் தள்ளி வைக்கப்பட்டது

அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்கில்,  சாட்சிகளாகும் சாத்தியமுள்ள அனைவரையும் எதிர்த்தரப்புச் சந்திக்க வாய்ப்பளிக்கும் வகையில் விசாரணை ஆகஸ்ட் 22-க்குத் தள்ளி வைக்கப்பட்டது.

கர்பால் தலைமையில் செயல்படும் எதிர்த்தரப்பு இதுவரை, சாட்சிகளாகும் சாத்தியம் உள்ளவர்கள் என அரசுத்தரப்புப் பட்டியலில் உள்ளவர்களில் 19 பேரைச் சந்தித்துள்ளது. அது சந்தித்தவர்களில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவர்தம் துணைவியார் ரோஸ்மா மன்சூர் ஆகியோரும் அடங்குவர். வெள்ளிக்கிழமை அவர்களைச் சந்தித்தது,

ஆனால், அவ்விருவரும் எதிர்த்தரப்புச் சாட்சிகளாக முடியாது என்று கூறிவிட்டனர்.

இன்னும் சந்திக்கப்படாமல் இருப்பவர்களில் போலீஸ் படையின் முன்னாள் தலைவர் மூசா ஹசனும், கொண்டோமினிய உரிமையாளரிடம் வேலை செய்த இரு இந்தோனேசியப் பணிப்பெண்களான சுலியாதியும் பாரியா திபனும் உள்ளிட்டிருக்கின்றனர்.

பணிப்பெண்கள் இருவரும் இந்தோனேசியா திரும்பி விட்டனர். அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சி பற்றி போலீசார் நீதிபதியிடம் தெரிவிப்பர்.

இம்மூவரையும் தவிர்த்து சைபூல் முன்பு திருமணம் செய்துகொள்ள நிச்சயம் செய்துகொண்டிருந்தவரின் தாயாரான சரேஹா முகம்மட் சலிம், புஸ்ரவி மருத்துவமனை தாதி யாசிஹான் ஜூசோ, அன்வாரின் மெய்க்காவலர் முகம்மட் ரசிட் முகம்மட் ரோஸ்டி ஆகியோரையும் எதிர்த்தரப்பு இன்னமும் சந்திக்கவில்லை.