சுயேச்சை செய்தி இணையத் தளமான மலேசியாகினி, Seacem எனப்படும் தென்கிழக்காசிய மின்னியல் ஊடக மய்யத்துக்கும் இதர திட்டங்களுக்கும் ஆதரவாக அனைத்துலக நன்கொடையாளர்களிடமிருந்து நிதிகளைத் திரட்டியதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி பிரமேஷ் சந்திரன் இன்று கூறினார்.
மலேசியாகினி Seacem அமைப்பை 2004ம் ஆண்டு தோற்றுவித்தது. பத்திரிக்கை சுதந்திரம், மனித உரிமைகள், ஜனநாயகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த ஆசியாவில் உள்ள இணைய ஊடகங்களுக்கு உதவுவது அதன் நோக்கமாகும்.
அது தோற்றுவிக்கப்பட்டது முதல் நேப்பாளம், பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, மங்கோலியா, சீனா, ஹாங்காங், தாய்லாந்து, பர்மா, பிலிப்பீன்ஸ், கம்போடியா, வியட்னாம், சிங்கப்பூர், இந்தோனிசியா, கிழக்குத் தீமோர் ஆகிய 15 நாடுகளில் உள்ள இணைய ஊடக அமைப்புக்களுடைய ஆற்றலை அது மேம்படுத்த உதவியுள்ளது.
“அந்த அமைப்புக்களைச் சார்ந்தவர்களுக்கு சிறந்த இணையத் தளத்தை அமைப்பதிலும் இணையப் பாதுகாப்பை அதிகரிப்பதிலும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதிலும் புதிய வீடியோ பொருட்களை மேம்படுத்துவதிலும் புதிய ஊடகங்கள் தொடர்பான இதர துறைகளிலும் Seacem பயிற்சி அளித்துள்ளது,” என பிரமேஷ் சொன்னார்.
“இந்த வட்டாரத்தில் இயங்கத் தொடங்கிய செய்தி இணையத் தளம் மலேசியாகினி ஆகும். முதலாவது செய்திகடந்த 13 ஆண்டுகளாக நாங்கள் உருவாக்கி வந்துள்ள எங்கள் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்வதற்கு Seacem ஒரு வழியாக அமைந்தது,” என்றும் பிரமேஷ் குறிப்பிட்டார்.
“Seacem திரட்டிய நன்கொடைகள் அந்த அமைப்புக்களின் ஊழியர்கள் சில மாதங்களுக்கு கோலாலம்பூரில் மலேசியாகினி அலுவலகத்தில் பயிற்சி பெற பயன்படுத்தப்பட்டது.”
வட்டார மனித உரிமை இணையத் தளங்கள்
எட்டு முக்கியமான வட்டார அமைப்புக்களுக்கு மனித உரிமை இணையத் தளங்களை உருவாக்குவதற்கு Seacem நியமிக்கப்பட்டது. அதில் சுவாராமும் ஒர் அங்கமாகும்.
வாஷிங்டனைத் தளமாகக் கொண்ட ஜனநாயகத்துக்கான தேசிய அறக்கட்டளையிடமிருந்து (NED) சுவாராமும் மலேசியாகினி உட்பட மலேசிய அமைப்புக்களும் நிதி உதவிகளைப் பெற்றது மீது எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு பதில் அளித்த போது பிரமேஷ் அந்த விவரங்களைத் தெரிவித்தார்.
மலேசியாகினி தனது சிறப்புத் திட்டங்களுக்கு ஆதரவாக அது NED உட்பட பல அனைத்துலக நன்கொடையாளர்களிடமிருந்து மானியங்களைப் பெறுகின்றது என்றார் அவர்.
Seacem தவிர அந்த நன்கொடைகளைக் கொண்டு நாடு முழுவதும் 300 குடி மக்கள் பத்திரிக்கையாளர்களையும் மலேசியாகினி உருவாக்கியுள்ளது. அத்துடன் Undi.info, digitalibrary.my போன்ற தகவல் தளங்களையும் அது உருவாக்கியுள்ளது.
பத்திரிக்கை சுதந்திரத்தை மேம்படுத்த பயனுள்ள திட்டங்கள் மீது அந்த அனைத்துலக அற நிறுவனங்களுடன் வேலை செய்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அந்த மானியங்கள் மலேசியாகினி வரவு செலவுத் திட்டத்தில் சிறிய பகுதியே.”
நிதிச் சுதந்திரம்
அனைத்துலக நன்கொடையாளர்கள் மானியங்களை அளித்த போதிலும் மலேசியாகினி ஆசிரியர் பகுதி சுதந்திரத்தை உறுதியாகக் கடைப்பிடிக்கிறது என்றும் பிரமேஷ் வலியுறுத்தினார்.
“நிதி ரீதியில் சுதந்திரம் இல்லாவிட்டால் ஆசிரியர் பகுதி சுதந்திரமாக இயங்க முடியாது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.”
“அதனை பாதுகாப்பதற்கு மலேசியாகினி, அரசாங்கம், விளம்பரதாரர்கள், நன்கொடையாளர்கள், அரசியல் கட்சிகள் ஆகிய தரப்புக்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டிருக்க வேண்டும்.”
“அதனால்தான் இன்று வரை மலேசியாகினியில் 70 விழுக்காடு பெரும்பான்மைப் பங்குகள் அதனை தோற்றுவித்தவர்களிடமும் அதன் ஊழியர்களிடமும் இருக்கின்றது. சந்தாக் கட்டணம் செலுத்துமாறும் நாங்கள் எங்கள் வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். ஆகவே எங்கள் வருமானத்தில் பெரும்பகுதி வாசகர்களிடமிருந்தும் விளம்பரங்கள் வழியாகவும் கிடைக்கின்றது.”
“ஆசிரியர் பகுதி சுதந்திரத்தை மதிக்கும் உத்தரவாதம் ஒன்றில் கையெழுத்திடுமாறு எங்கள் முதலீட்டாளர்களை கேட்டுக் கொள்ளும் ஒரே ஊடக நிறுவனம் நாங்களாகத்தான் இருக்க வேண்டும்.”
மலேசியாகினி ஆசிரியர் பகுதி சுதந்திரத்தில் தொடர்ந்து உறுதியாக இருக்கும். பத்திரிக்கை சுதந்திரத்தை மேம்படுத்தும் திட்டங்களில் தன்னைப் போன்ற எண்ணங்களைக் கொண்ட பங்காளிகளுடன் அது ஒத்துழக்கும் என்றும் பிரமேஷ் வலியுறுத்தினார்.
“பத்திரிக்கை சுதந்திரம் ஜனநாயகத்துக்கு அவசியம் என நாங்கள் நம்புகிறோம். அரசாங்கத்தைப் பொறுப்பேற்கச் செய்வதற்கும், ஊழலை தடுப்பதற்கும் புரவலர் அரசியலை நிறுத்துவதற்கும் அதுவே ஒரே வழியாகும்,” என்றும் அவர் சொன்னார்.