கருத்து: தமிழர்களின் வரலாற்று வாழ்வாதார தடங்களை நிறையவே அழித்து விட்டார்கள். எஞ்சி இருப்பவை சில. அவற்றையாவது நாம் தற்காத்துக் கொள்வோமா? என்கிற நியாயமான உணர்வால், ஆதங்கத்தால் நண்பர் சீ. அருண் அவர்களின் ‘தமிழர் தடங்கள்’ வரலாற்று ஆவணம் மலேசிய தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்டிருந்த சில உண்மைகளை மிகத் துல்லியமாக ஆதாரத்துடன் உறுதிப்படுத்திருப்பது – வரலாற்றை மறந்து வரும் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு சாட்டை.
வரலாறு அறியாத இனமாக வாழ்வது பெருங்கொடுமை, மலேசியத்தில் தமிழர்களுக்குப் பல்வேறு கொடுமைகள் இழைக்கப்பட்டு கொட்டக் கொட்டக் குனிந்தும் போரடியும் கெட்டும் குட்டிச்சுவராகாமல் இருக்கும் சமுதாயத்தை ஒரு கணம் நிறுத்தி கடந்து வந்த வரலாற்றை சற்று நிமிர்ந்து பார்க்க வைக்கும் தருணம் இந்த தமிழர் தடங்கள்.
அதற்காகவே முதலில் நண்பர் அருணுக்கு என்னுடைய நன்றி! இன வேற்றுமைகளால் – இன வெறியால் வரலாறுகள் மறைக்கப்படலாம் வாழ்ந்த தடயங்கள் அழிக்கப்படலாம். அரசு ஆவணை – சேனை என்ற ஆணவ பலத்தால். ஆனால் மனிதர்கள் வாழ்ந்த சுவடுகளை அழிப்பதும் மறைப்பதும் மன்னிக்க முடியாத குற்றம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் முடிவு. காலங்கடந்தாவது அகழ்வாராச்சியால் உண்மைகள் வெளிப்பட்டே தீரும்.
தமிழர்களின் முன்னோர்கள் இம்மண்ணில் தடம் பதித்து வாழ்ந்தவர்கள் என்பதற்கு சான்றுகள் பல உள்ளன.
தமிழர்களின் உழைப்பும் கால் தடங்களும் இல்லாது மலாயா – மலேசிய வரலாறு இல்லை என்பது நிருபிக்கப்பட்ட உண்மைகள்.
புதிய இனவாதிகளால் வரலாறுகள் மாற்றி எழுத படலாம். உண்மைகள் மறையாது; மறைக்கவும் முடியாது; மறுக்கவும் முடியாது.
மலேசியாவின் ஒவ்வொரு மாநில மண்ணிலும் நமது மூத்த தமிழரின் குருதி கலந்தே இருக்கும்.
தேடிக் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்களை முறையாகத் தொகுத்து; முறைப்படித்தி மலேசிய இந்திய சமூகத்திற்கு வழங்கியிருப்பது போற்றப்பட வேண்டிய தருணம் தமிழர் தடங்கள்.
தமிழர்கள் நீண்ட தூக்கத்திலிருந்து மீண்டெழ வேண்டும். நம்மை நாம் புரிந்து கொள்ள; மேலும் மீண்டும் ஒருமுறை நம்முடைய கடந்தகால தடையங்களை – தடங்களைத் தெரிந்து கொள்ள ஓர் அரிய வாய்ப்பு.
நண்பர் சீ. அருணுக்கு நம்முடைய பாராட்டுகள்.
தமிழர் தடங்கள் இந்திய சமூகம் படித்துப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய ஆவணம் என்பதில் இரண்டு கருத்துகள் இருக்க முடியாது.
வாழ்த்துகள்
சாமிமூர்த்தி, கோலாலம்பூர்.
21.9.2012
——————————————
தேதி/ நாள் : 23-09-2012 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை மணி 5.00 தொடக்கம்
இடம் : திருவள்ளுவர் மண்டபம், கிள்ளான் துறைமுகம்.
தொடர்புக்கு : திரு. கெ. வடிவேலன் 012-2690588 / திரு. சீ. அருண் 012-3002911